விஷால் பிலிம் ஃபேக்டரி, யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என ரஜினி நடித்து 1985ல் வெளியாக சூப்பர் ஹிட்டாக ஓடிய படத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
பழைய படங்களின் பெயரை புதிய படங்களுக்கு வைப்பது தற்போது ஒரு பேஷனாகவே மாறி விட்ட காலத்தில், குறிப்பாக ரஜினிகாந்த் படத்துப் பெயர்களை மட்டும் அனைவரும் வைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இந்த புதிய படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படமிது.
“இயக்குநர் கூறிய கதை பிடித்ததால் இந்தப் படம் திட்டமிப் பட்டது. இது நிச்சயமாக விஷாலுக்கு மிக முக்கிய படமாக இருக்கும்.எதிர்பாராத படமாகவும் இருக்கும்.” என்கிறார் யூடிவியின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.தனஞ்ஜெயன்.
படம் பற்றி விஷால் கூறும் போது, ”இந்தப் பட கூட்டணி பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 2வது படமே யூடிவியுடன் இணைவதில் பெருமை. அனைவரது அன்பாலும் ஆதரவாலும் படம் சிறப்பாக வருமென்று நம்புகிறேன்,” என்கிறார்.
இயக்குநர் திரு கூறும் போது, ” நான் இந்தப் படக்குழு பற்றி பெருமைப் படுகிறேன். யூடிவி யாகட்டும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியாகட்டும் குழுவில் உள்ள ஒவ்வொருவருமே குழுவின் பலம் என்று சொல்லும்படி இருப்பது சிலிர்ப்பாக இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் இது வியப்பும் ஊக்கமும் அளிக்கிற படக்குழு என்று பெருமிதமாகக் கூறுவேன். இந்த அருமையான குழுவினருடன் இணைந்து இயங்கப் போகிற நாட்களுக்காக, அந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறோம். “என்கிறார்.
படத்துக்கு ஒளிப்பதிவு -ரிச்சர்ட் எம்.நாதன், இசை – எஸ்.எஸ் தமன், பாடல்கள்-மதன் கார்க்கி, எடிட்டிங் -அந்தோனி எல். ரூபன், ஆர்ட்- ஜாக்கி, தயாரிப்பு- ரோனி ஸ்க்ருவாலா- சித்தார்த் ராய் கபூர்-விஷால்
யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து உருவாக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகவிருக்கிறது. நவம்பர் 3 வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து 2014 சம்மர் சீசனில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.