உலகை அச்சுறுத்தும் மிக கொடிய நோய்களில் முதலிடம் எயிட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு உண்டு. இந்த நோயை போக்குவதற்காகவும், கட்டுப்படுத்தவும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
டிசம்பர் முதல் தேதியை உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கிறார்கள். அதே தினத்தில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. டீச் எயிட்ஸ் அமைப்பு எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தில் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அனிமேஷன் காட்சிகளில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த தமிழ் அனிமேஷன் படத்தை இணையம் வைத்திருக்கிறவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இதை சிடி வடிவில் இலவசமாக வழங்கும் பணியை தமிழக அரசின் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி செய்து வருகிறது.
டீச் எயிட்ஸ் அமைப்பும், தமிழக அரசின் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியும் இணைந்து சுயஉதவி குழுக்கள், நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமப்புறங்களில் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும்போது இந்த தமிழ்அனிமேஷன் விழிப்புணர்வு படத்தை திரையிடுவார்கள்.
ஸ்டன்போர்டு பல்கலைக் கழகமும், டீச் எயிட்ஸ் அமைப்பும் செயல்படுத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு யூனிசெப், கூக்லி, டிலைட், டாடா ஸ்டீல், சிக்னா மற்றும் யாஹூ நிறுவனங்களும் கைகோர்த்திருக்கிறார்கள் என்கிறார் டீச் எயிட்ஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் பியா சர்கார்.