விஜயகாந்த்தின் இளைய மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்தி, விக்ரம் பிரபு, கருணாஸ், இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் பல திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவில் விஜயகாந்த் பேசும் போது,
“என்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரனைத்தான் நடிகராக அறிமுகம் செய்யலாம் என நினைத்தோம். ஆனால் அவன் படிக்க விரும்புவதாகக் கூறி விட்டான்.
நான் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன். இந்தப் படம் 100 நாள் ஓடணும்னுலாம் நான் ஆசைப்படலை. 5 வாரம் ஓடினாலே போதும். என்னை நம்பி படத்தை வாங்கற டிஸ்டிரிபியூட்டர்களுக்கு நஷ்டம் வராம இருந்தா போதும்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம். நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் கூட இரண்டு ஹீரோயின்கள் நடிக்கலை. ஆனால், என் பையன் இந்த படத்துல இரண்டு ஹீரோயின்கள் கூட சேர்ந்து நடிக்கிறான்.
என்னை மாதிரியே சண்டை பழகலை, டான்ஸ் பழகலை, நடிப்பு பழகலை. ஆனால், தைரியம் மட்டும் அவன் கிட்ட இருக்கு.
உங்க எல்லாரையும் நம்பித்தான் என் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தறேன், நீங்க எல்லாரும் ஆதரவு தரணும், ” என விஜயகாந்த் பேசினார்.
இப்படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். நவீன் கதை எழுத, வேலுமணி வசனம் எழுதுகிறார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் படத்தைத் தயாரிக்கிறார்.