நடிகர் விஜய் அவரை வைத்து ஆரம்ப காலங்களில் படங்களை தயாரித்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் வீதம் ருபாய் 25 லட்சம் வழங்கினார் .
‘வசந்த வாசல்’ படத்தை தயாரித்த ராஜாராம் , ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த சௌந்தரபாண்டியன், ‘மின்சாரக் கண்ணா’ படத்தை தயாரித்த கேஆர்ஜி அவர்களின் மனைவி சாந்தா , ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் தயாரிப்பாளர் சி.வி.ராஜேந்திரன் , ‘விஷ்ணு’ படத்தின் தயாரிப்பாளர் எம் . பாஸ்கர் மகன் பாலாஜி பிரபு ஆகியோர் விஜயிடம் இருந்து அந்த உதவித் தொகையைப் பெற்றார்கள் .
அவர்கள் நிகழ்ச்சியில் பேசும் போது விஜய் தங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து நடித்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள் .
நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது , “பல பேரோட கூட்டு முயற்சியில தான் சினிமா உருவாகுது . ஆனா தயாரிப்பாளர்கள் மட்டும்தான் ஒரு படம் பூஜைப் போட்டதிலிருந்து ரிலீசாகிற வரைக்கும் அந்தப்படத்துல வேலை செஞ்ச நூத்துக்கணக்கானவங்களுக்கு சாப்பாடு போட்டு ஒரு தாயைப் போல எங்களையெல்லாம் கவனிச்சிக்கிறாங்க. அவங்களுக்கு ஏதோ ஒரு ப்ராப்ளம்னு கேள்விப்படுறப்போ என்னோட மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
என்னோட ஸ்டார்ட்டிங் சினிமா கேரியர்ல நான் போராடிக்கிட்டிருந்த டைம்ல என்னை வெச்சு படம் பண்ணின புரொடியூசர்களுக்கு ஏதோ ஒருவிதத்துல கஷ்டம்னு தகவல் வர்றப்போ இந்த நேரத்துல நான் அவங்களுக்கு கை கொடுக்கிறது என்னோட ஒரு கடமைன்னு எனக்கு தோணிச்சு. இவளோ நாள் ஏன் இது உங்களுக்கு தோணலேன்னு நீங்க கேட்கலாம்?
நல்ல விஷயம் எப்போ தோன்றினால் என்ன? தோன்றின உடனே செஞ்சிடணும். அதனால தான் என்னால முடிஞ்ச உதவியை இப்போ செஞ்சிருக்கேன். இதை என்னோட ஆபீஸ்லயோ இல்லேன்னா வீட்லேயோ தான் பண்ணிடலாம்னு நெனைச்சேன். ஆனா இது வெளியில தெரிஞ்சா அதைப் பார்த்துட்டு இன்னும் சிலபேர் கஷ்டத்துல இருக்கிற மற்ற தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வாங்கன்னு தோணுச்சு. அதனால் தான் பிரஸ்மீட் வெச்சு இந்த உதவியை செஞ்சிருக்கேன்.
வெற்றி ரெண்டு மடங்கு நம்பிக்கையைக் கொடுக்கும், தோல்வி ரெண்டு மடங்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஸோ நீங்க எல்லாரும் இந்த அனுபவத்தை வெச்சி மறுபடியும் ஜெயிச்சி வரணும்கிறது தான் என்னோட ஆசை,” என்றார் விஜய்.
இந்த உதவியை முழுக்க முழுக்க மனித நேய அடிப்படையில் செய்ததாக விஜய் கூறினார் .