தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை – வைரமுத்து

vairamuthu gangaru speech

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி–எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இது,’உயிர்’ ‘மிருகம்’ ‘சிந்து சமவெளி’ படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா  நடித்துள்ளனர்.

பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. ‘கங்காரு’ பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார்.

சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில்ஆடியோ சிடியை ஊடகங்கள் முன்னிலையில் சீமான் வெளியிட  கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார்.

விழாவில் வைரமுத்து பேசியதாவது,

“இப்படத்தின் இயக்குனர் சாமி தமிழ்த் திரைப்பட நிகழ்காலத்தின் தவிர்க்க முடியாத இயக்குநர். நன்மையோ தீமையோ பேசியாக வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று கல்கி சொல்வார். ‘ஒன்று அந்தக் கதையை எல்லோரும் பாராட்ட வேண்டும். இல்லையேல் எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டும். இரண்டுமற்ற எழுத்தை எவனும் எழுதாதே’என்று. ஒரு படத்தை கொண்டாட வேண்டும். இல்லையேல் இப்படி ஒரு படமா என்று திட்ட வேண்டும். சாமிக்கு ஒரு பிம்பம் இருக்கிறது அல்லவா?. அந்த பிம்பத்தை இந்தக் ‘கங்காரு’ உடைக்கும்  என்று நம்புகிறேன்.

சாமியை தெரியும்.ஆனால் முன்பு சந்தித்தல்லை. என்னைத் தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை, தேடி வந்தவர்களை நான் நிந்திப்பதில்லை.

சாமி என் வீட்டுக்கு வந்தார், சந்தித்தார். ‘என் முதல் படத்திலிருந்து நீங்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார். அப்படியா என்றேன். ‘உங்கள் பட்ஜெட் பெரியது அதனால் வரமுடியவில்லை’ என்றார்.

‘உங்கள் பட்ஜெட் ரொம்ப பெரிசுன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு பணம் கொடுக்க எனக்கு வலிமை இல்லை’ என்றார். அப்படி யென்றால் இந்தப் படத்தில் வலிமை வந்துவிட்டதோ? ‘இல்லை இந்தப் படத்தில் நீங்கதான் எழுதணும்’ என்றார்.

பெரியபடம் என்பது கதாநாயகர்களுக்கானது. சிறியபடம்என்பது  தயாரிப்பாளர்களுக்கானது. மிகச் சிறியபடம் என்பதுதான் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கானது. நான் தொழில் நுட்பக் காலஞனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தின் வியாபாரம் எனக்குத் தெரியாதா? சினிமாவில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கர்ப்பத்தைம் பட்ஜெட்டையும் மறைக்க முடியாது. எனக்கு இது போதும் என்றேன்.

ஆனால் இந்தப் படத்துக்கு எழுதும் போது ரஜினிகாந்த் அவர்களுக்கும் கமல்அவர்களுக்கும், மணிரத்னம் அவர்களுக்கும், ஷங்கர்அவர்களுக்கும் எவ்வளவு உயரத்தில் எழுது வேனோ அந்த உயரத்திற்குத்தான் எழுதியிருக்கிறேன். ஏனென்றால் படத்தில் வருவது என் பெயர். என் பெயருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும். பெயருக்குப் பின்னால் வவுச்சர் வரப்போவது இல்லை.

என் பெயரின் மீது தமிழ்நாட்டு மக்கள் ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை என் இறுதி மூச்சு உள்ளவரை காப்பாற்றுவேன்.  அண்ணன் தங்கையை வைத்து சாமி அற்புதமாக கதை பண்ணியிருக்கிறார்.

இந்த இசை வெளியீட்டு விழாக்களுக்கெல்லாம், எங்களுக்கெல்லாம் மூலமாக இருந்தவர், தமிழ்நாட்டு பொக்கிஷமாக இன்னும் இருப்பவர், கிராமத்து இசையை உலகத்தின் செவிகளுக்குக் கொண்டு சேர்த்தவர், தமிழ் நாட்டின் இசையை உலகமெல்லாம் வெள்ளை மாளிகை வரைக்கும் விநியோகித்தவர். அந்த மகாக்கலைஞன் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவர் முழுநலம் பெற்று  மீண்டும் வந்து இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு  இசையமைத்திட வேண்டும் என்று இந்த சபையில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று வைரமுத்து பேசினார்.

நிகழ்ச்சியில், இயக்குநர் சீமான், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் சாமி, கே.எஸ். அதியமான், ஆர்.சுந்தர்ராஜன், இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ், நடிகைகள் நமீதா, வர்ஷா,ப்ரித்திதாஸ்,  கோமல் ஷர்மா, நடிகர்கள் சிபிராஜ்,  ஸ்ரீகாந்த், தயாரிப்பாள நண்பர்கள் தூவார் சந்திரசேகர், முருகேசன், இளையதேவன், தயாரிப்பாளர் ராஜா  ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ‘கங்காரு’ படப்பாடல்களை பாடகர்கள் பிபின்,ஸ்வேதா மோகன், ஷரண்யா ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பாடினார்கள்.

முன்னதாக தயாரிப்பாளர் சுரேஷ் வரவேற்புரையாற்ற விழா முடிவில்  வெற்றி நன்றி உரையாற்றினார்.

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

மேடையில சீட்டை குறைவா போடுங்க – நடிகர் விவேக் யோசனை