இசையமைப்பாளர் இளையராஜா சில வாரங்களுக்கு முன் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் ஆலோசனைப்படி கட்டாய ஓய்வில் இருந்தார்.
இதனால், மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான இசை விழாவிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையிலிருந்து ரசிகர்களுடன் உரையாடி அவர்களை நெகிழ வைத்தார்.
தற்போது, பூரண நலம் பெற்று மீண்டும் தன் இசைப் பயணத்தை இன்று காலை தொடங்கினார். புதிய உற்சாகத்தோடு சினேகன் நாயகனாக நடிக்கும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ படத்திற்கு இன்று ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தார். இப்பாடலுக்கான ‘கம்போசிங்’ நேற்று நடைபெற்றது.
இளையராஜா உடல் நலம் பெற்று திரும்பிய பின் பதிவு செய்யும் முதல் பாடல் என்பதாலும், 2014ம் ஆண்டு அவர் செய்யும் முதல் பாடல் பதிவு என்பதாலும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.