சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள ‘இனம்’ படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இனப் போராட்டத்தை இப்படம் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும், சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்கள் மூலம் படத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வரிந்து கட்டிக் கொண்டு ‘இனம்’ படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளதும் தமிழர் அமைப்புக்களை ஆத்திரமூட்டியுள்ளதாகத் தெரிகிறது.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு படத்திலிருந்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ‘இனம்’ திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம்.
இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து ‘இனம்’ படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.
படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டுக் கொண்டதன்படி கீழே குறிப்பிட்டுள்ள,
1. பள்ளிக்கூடக் காட்சி
2. புத்தமதத் துறவி தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி
3. சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி
4. தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்
5. படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்,
என்கிற ஐந்தும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், ” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டாலும், இப்படி ஒரு படத்தை இந்த சூழ்நிலையில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கேட்கிறார்கள்….