வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ திரைப்படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரப் பற்றி தவறாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளதாகவும், அதனால் தெலுங்கு பேசும் மக்கள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராரைப் பற்றி தவறாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து படம் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றி பற்றித்தான் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதனால் சாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தெலுங்கு அமைப்புகள், ஐகோர்ட்டு நியமிக்கும் அதிகாரிகளுக்கு பத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்த மனு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிப்பட உள்ளது.
‘தெனாலிராமன்’ படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பட வெளியீட்டின் போது ஏதாவது பிரச்சனை செய்ய வேண்டும் என்றே சில தெலுங்கு அமைப்புகள் பிரச்சனை செய்கின்றன என சில தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
கோடி, கோடியாக செலவு செய்து எடுக்கப்படும் படத்திற்கு, இப்படி கடைசி நேரத்தில் பிரச்சனை செய்து பட வெளியீட்டை தடுக்க முயல்வது தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்று என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வழக்கு தொடர்ந்துள்ள ஜெகதீஸ்வர ரெட்டியும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தயாரித்த ‘ராவண தேசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்த படம் ஈழத் தமிழர்களைப் பற்றிய ஒரு படம்.
இப்படி தமிழர்களைப் பற்றிய படங்களை தெலுங்கர்களும், மலையாளிகளும் எடுக்கும் போதே அதை நாம் எதுவுமே கேட்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால், தமிழர்களாகிய நாம் தமிழ்நாட்டில் படம் எடுக்கும் போது, 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த தெலுங்கு மன்னரான கிருஷ்ணதேவராயர் பற்றி தவறாக எடுக்கிறார்கள் என வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள், என தமிழ் உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த சீமான், வ.கௌதமன், ஜாக்குவார் தங்கம் ஆகியோர் வடிவேலுக்கு ஆதரவாகவும், ‘தெனாலிராமன்’ படத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ள நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாய் மூடி மௌனம் காத்து வருகிறது.
‘இனம்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர்கள் சங்கம், இந்த பிரச்சனையில் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. வடிவேலுவுக்கு ஆதரவாக நடிகர் சங்கமும் எதுவும் சொல்லவில்லை.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சங்கமே. ஆனால், இன்று இந்த சங்கம் எப்படி செயல்படுகிறது என்பதற்கு இது மாதிரியான விஷயங்களே உதாரணம் என பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் தெரிவித்தார்.
இன்னும் 6 நாட்களுக்குள் ‘தெனாலிராமன்’ வெளியாக வேண்டும். இல்லையென்றால் சில கோடிகள் நஷ்டம் வருவதற்கும் வாய்ப்புண்டு.
இனியாவது, தயாரிப்பாளர்கள் சங்கம் இதில் தலையிடுமா ? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைக் காப்பாற்றுமா ?