நான் சிகப்பு மனிதன் – விமர்சனம்

naan sigappu manithan review தமிழ் சினிமாவில் எத்தனையோ விதமான பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அதிலும் வித்தியாசப்பட்டு நிற்கும் படங்களுக்கே நல்ல வரவேற்பும், வெற்றியும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘நான் சிகப்பு மனிதன்’. பொதுவாக, திரைப்படங்களில் நாயகனுக்கோ, நாயகிக்கோ வாயில் நுழைய முடியாத ஏதாவது ஒரு பெயர் கொண்ட நோய் வந்து கிளைமாக்சில் அனைவரையும் கண்ணீர் விட முயற்சிப்பார்கள். இந்த படத்தில் நாயகனுக்கு வாயில் நுழையும் பெயர் கொண்ட வியாதியான ‘நார்க்கோலெப்சி’ (திடீர் அதிர்ச்சியால் தூங்கி விடுவது) என்ற ஒன்று இருக்கிறது ஆரம்பத்திலேயே சொல்லி விழிப்புடன் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குனர் திரு. படத்தின் ஆரம்பம் முதலே விஷால் அடிக்கடி தூங்கி விழுந்தாலும், இடைவேளைக்குப் பின் லட்சுமி மேனன் தூங்கிக் (கோமாவில்) கொண்டே  இருந்தாலும், ரசிகர்களை தூங்க விடாமல் செய்து, விறு விறுப்பான திரைக்கதையின் மூலம் அனைத்து மனிதர்களின் மனங்களையும் வென்றிருக்கிறார் இயக்குனர். சிறு வயது முதலே ‘நார்க்கோலெப்சி’ என்ற வியாதியால் அடிக்கடி தூங்கி விடும் பழக்கம் உடையவர் விஷால். இவருக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணான லட்சுமி மேனனுக்கும் காதல். இப்படி ஒரு மாப்பிள்ளையை எந்த அப்பா ஏற்றுக் கொள்வார் என லட்சமியின் அப்பா ஜெயப்பிரகாஷ் காதலுக்கு எதிராக இருக்கிறார். அப்பாவுக்கு வாரிசுதான் பிரச்சனை என்பதால், விஷாலுக்கு எப்போது தூக்கமே வராது என்பதை ஆராய்ந்து அவருடன் ஓருடல், ஈருயிராய் ஆகி, தனக்குள் வாரிசு ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார் லட்சுமி மேனன். இதனிடையே ஒரு நாள் லட்சுமி மேனனை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கற்பழிக்கிறது. அதிர்ச்சியில் அந்த நேரம் பார்த்து விஷால் தூங்கி விடுகிறார். லட்சுமி மேனன் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்று விட, அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார் என்பதை, ‘நார்க்கோலெப்சி’யையும் மீறி விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. விஷால் – லட்சுமி மேனன் முத்தக் காட்சி படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது. இப்படி கதையுடன் கூடிய முத்தக் காட்சியை தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. ‘பாண்டிய நாடு’ வெற்றிக்குப் பிறகு, ஏறக்குறைய அதே மாதிரியான நடுத்தரக் குடும்பத்து இளைஞன் கதாபாத்திரத்தில் 100 சதவீதம் பொருத்தமாக இருக்கிறார் விஷால். ‘டக் டக்’ என அவர் தூங்கி விழுந்தாலும் நடிப்பில் விழாமல், அவர் உயரம் போலவே நிமிர்ந்து நிற்கிறார். இம்மாதிரியான கதாபாத்திரம் எப்படி இருப்பார்கள் என்பதைக் கூடப் பார்த்துப் புரிந்து கொண்டு நடிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.  ஆனால், இடைவேளைக்குப் பின் தன் காதலியை இந்த நிலைக்கு தள்ளியவர்களைக் கண்டு, பெரும் கோபம் வர வேண்டாமா ? ஏதோ, அவரை நாலு பேர் கிண்டல் மட்டுமே செய்தார்கள் என்பது போல காட்சிகள் அமைந்துள்ளன. டெல்லியில் நாலு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து,  கொலை செய்ததைக் கேட்கும் நமக்கே, அவர்களை அடித்துத் துவைக்க வேண்டும் என நினைக்கும் போது, விஷால், அவர் காதலியின் நிலையைப் பார்த்து அமைதியாகவே பொங்குவது ஏனோ ? போன படத்தின் ராசியும், சென்டிமென்ட்டும் தொடர்வதற்கு இந்த படத்தில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார் என்று சொன்னால் தவறு. விஷாலுக்கும், அவருக்குமான ஏதோ  ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பது திரையில் தெளிவாகவே தெரிகிறது. அப்பாடா…மதுரைப் பொண்ணு கேரக்டர்ல இருந்து லட்சுமி மேனனை விடுவிச்சி, முதல் முறையா ஒரு பணக்காரப் பெண்ணா, அதுவும் மாடர்ன் பெண்ணா நடிச்ச வச்சிருக்காங்க. இருந்தாலும், சீரியல்ல நடிக்க வராம டிமிக்கி கொடுக்கற நடிகை மாதிரி, லட்சுமி மேனனை இடைவேளைக்கப்புறம் அப்படியோ ‘கோமா’வுல போட்டுட்டீங்களே டைரக்டர்…லட்சுமி மேனன் ரசிகர்கள் சாபம் உங்களை சும்மா விடாது… அம்மான்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லாரும் நினைக்கிற மாதிரியான பாசமான அம்மாவா சரண்யா. எத்தனை படம் வேணாலும் நீங்க அம்மாவா நடிச்சிட்டேயிருக்கலாம். ரசிக்கிறதுக்கு நாங்க ரெடி. விஷால் நண்பர்களா ஜெகன், சுந்தர் ராம், ஸ்ரீனிவாஸ்…வெவ்வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் நண்பர்களா இருக்கிறது கொஞ்சம் கடினம்தான். அதிலும் ஒருவர் இன்னொருவர் மனைவியை ஆசை நாயகியாக வைத்திருப்பதெல்லாம் டூ டூ மச்…அல்ல..த்ரீ..ஃபோர் மச்… 80களில் சில்க் ஸ்மிதா பல படங்களில் பணக்காரர்களான ரவீந்தர், ராஜீவ், சரத் பாபுக்களை பிளாக் மெயில் செய்து  நடித்த ஆசை நாயகி கதாபாத்திரம் இனியாவுக்கு. கவர்ச்சி காட்டாமலே கவர்ந்திழுக்கிறார். ஜாக்கிரதையா இருங்க இனியா…இல்ல…இப்படியே கதாபாத்திரங்கள் வந்துக்கிட்டேயிருக்கும்… ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், ‘இதயம் உன்னை தேடுதே’… பாடல் அழகான காதல் தாலாட்டு. படத்தின் ஹீரோயினை தூங்க வைத்தே ஒரு பாடலை எடுத்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும். மற்ற பாடல்களும் ஓ.கே. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு தனி கலரைக் கொடுத்திருக்கிறது. பாடல்களை மிகவும் ரசனையோடு ‘ஒளி’ அமைத்து படமாக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின்னர் வரும் பல திருப்பங்கள் படத்தைத் தாங்கிப் பிடித்தாலும், அவை இன்னும் வேகமாக இருந்திருக்கலாம். லட்சுமி மேனன் கற்பழிப்புக் காட்சியின் நீளம் ,  நம்மையும் பதற வைக்கிறது. இந்தக் காலத்திலும் இனியா போன்ற பெண்களும், சுந்தர் ராம் போன்ற ஆண்களும் இருப்பார்களா என்ன ? நான் சிகப்பு மனிதன் – பச்சை விளக்கு…அதாங்க…கிரீன் சிக்னல்…  

Read Previous

‘தெனாலிராமன்’ – தடை கேட்பது சரியா ?

Read Next

தெனாலிராமன் பிரச்சனை – பாரதிராஜா ஆதரவுக் குரல்

Most Popular