விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற ‘டாக் ஷோ’வான ‘நீயா நானா’ இயக்குனரான அந்தோணி திருநெல்வேலி, சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு தயாரிப்பாளராக வந்துள்ளார்.
அவருடைய மெர்க்குரி நெட்வொர்க்கின் முதல் தயாரிப்பாக ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.
நட்சத்திரங்களை நம்பாமல், கதையை மட்டுமே நம்பி, முற்றிலும் குழந்தைகளை மையப்படுத்தி, சிறுவர் சிறுமியர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படமாக தயாரித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் ஏற்கெனவே யு டியூப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திரைப்படத் தயாரிப்பாளராக ஆகியுள்ளேன் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி.
‘அழகு குட்டி செல்லம்’ படத்தை சார்லஸ் இயக்கியிருக்கிறார். வேத் சங்கர் சுகவனம் இசையமைப்பில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார்.
கென் கருணாஸ், சாணக்யா, ‘சூப்பர் சிங்கர்’ யாழினி, ராஜேஷ் குணசேகர், கருணாஸ், தம்பி ராமையா, உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இயக்குனர் சார்லஸ் படத்தைப் பற்றிக் கூறுகையில்,
“இந்த படம் ‘அஞ்சலி, பூவே பூச்சூடவா’ மாதிரியான ஒரு அழகான குடும்பப்படம். குழந்தைகளுக்கான படம் மாதிரி தெரிஞ்சாலும் குடும்பதோட வந்து பார்க்கலாம்.
குழந்தைங்கறத ஒரு மையப்புள்ளியா எடுத்துக்கிட்டு, ஒரு படத்துக்குள்ளேயே பல்வேறு கதைகள் பிணைந்து வர்ற படம் இது. ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்குள்ளயும் குழந்தைங்கறது எப்படி ஒரு பிரச்சனையா இருக்கு. பார்த்தீங்கன்னா, ஒருத்தருக்கு குழந்தையே இல்லைங்கற பிரச்சனை, இன்னொருத்தருக்கு எல்லாமே பெண் குழந்தைகளா இருக்கும், ஆண் குழந்தையே இல்லைன்னு பிரச்சனை. வேற ஒருத்தருக்கு குழந்தையை பறி கொடுத்த சோகம், அப்புறம் இளம் காதல் ஜோடில திருமணத்துக்கு முன்னாடியே குழந்தைய சுமக்கிற பெண், விவாகரத்துக்குப் போற ஒரு ஜோடி, இந்த மாதிரியான குழந்தைய சுத்தியே நடக்கிற பல்வேறு பிரச்சனைகள்தான் படத்தோட கதை.
ஒரு பள்ளி நாடகத்துக்காக ஒரு குழந்தை தேவைப்படுது. அந்த குழந்தைய தேடிப் போற சில சிறுவர், சிறுமியர்கள் மேற் சொன்ன குடும்பத்தோட டிராவல் ஆகற சூழ்நிலை வருது. அதைத்தான் திரைக்கதையா அமைச்சிருக்கோம். அழுகாச்சியான, முழுக்க முழுக்க எமோஷனலான படமா இல்லாம ஒரு குழந்தையோட சிரிப்பை எப்படி ரசிப்பமோ அப்படி இந்த படத்தை ரசிக்கலாம்.
முதல் படம் எடுக்கும் போது மிருகங்களையும், குழந்தைகளையும் வச்சி எடுக்காதீங்க. ஏன்னா, அப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம். என்னோட முதல் படத்துல ‘நஞ்சுபுரம்’ படத்துல பாம்பு வச்சி பண்ணன். இப்ப இந்த படத்துல குழந்தைய வச்சி பண்ணியிருக்கேன். முடியாதுன்னு சொல்ற விஷயத்தை முயற்சி பண்ணி செஞ்சிருக்கேன். படம் பார்த்து வெளிய வர்றவங்க ஆனந்த கண்ணீரோடதான் வருவாங்க,” என்றார் இயக்குனர்.
“படத்தில் ஒரு காட்சிக்காக 2 மாத குழந்தை தேவைப்பட்ட போது, வேறு எந்த குழந்தையும் கிடைக்காத சூழ்நிலையில் இயக்குனர் சார்லஸ், அவருடைய 2 மாத குழந்தையையே படத்தில் நடிக்க வைத்தார். இதிலிருந்தே படத்தின் மீதான் அவருடைய ஈடுபாட்டைப் பார்க்கலாம்.
பெண்கள் அனைவருக்குமே இந்த படத்தின் கதை ஏனோ ஒரு விதத்தில் அவர்களை அனுபவப்பட வைத்திருக்கும். அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி திருநெல்வேலி.