ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் மூன்றாவது படமான ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கி விட்டனர்.
ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் படக்குழுவினரை கன்னடத் திரையுலகினர் வந்து வாழ்த்தினர்.
படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் கன்னடத்தில் மிகவும் புகழ் பெற்ற தயாரிப்பாளர்.
தமிழில் விக்ரம் நடித்த ‘மஜா’, சிம்பு நடித்த ‘தம்’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர்.
தயாரிப்பாளருக்காகவும், ரஜினிக்காகவும் கன்னடத் திரையுலகின் மற்றொரு பெரும் புள்ளியும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அம்பரீஷ், அவரது மனைவி சுமலதா உட்பட பலர் வந்து வாழ்த்தியுள்ளனர்.
‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு ரஜினி, ரவிக்குமார் கூட்டணி இணையும் படம் இது. சில வருடங்களுக்கு முன்னர் இவரும் இணைந்த ‘ராணா’ படத்தின் பூஜை நடைபெற்று, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன் ரஜினிகாந்தின் உடல் நிலை காரணமாக அப்படம் அத்துடன் கைவிடப்பட்டது.
தற்போது, இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.