நடிகர் கரிகாலன் தயாரிக்கும் 10 படங்கள்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘சோலையம்மா’ படத்தில் வில்லனாக நடித்தவர் கரிகாலன்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கிறார்.

“ரமணா, அரவான், அடிமைசங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் உள்ளிட்ட பல படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. அவர் இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.

சில காலம் நடிப்பு, இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார். ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து அதில் உயரிய இடத்தையும் பிடித்தார். தற்போது மீண்டும் கலைத் துறையில் கால் பதித்துள்ளார்.

காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்கிற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்.

அந்த நிறுவனம் பற்றிய அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் பிரபு சாலமான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் கரிகாலன் பேசியதாவது,

மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல, ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படைக் கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி, ஒழுக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கான மரியாதை, உற்சாகமாக இருப்பது, உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்கத் தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்.

அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம். இதையெல்லாம் அடிப்படைக் கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்.

இதையெல்லாம் நடை முறைப்படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அந்த ஆயுதம் சினிமா, அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்.

அதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத, குடும்ப உறவுகளின் மேன்மையைச் சொல்லும் விதமாகக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக, வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.

எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது. ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு. நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னைச் சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என, எனக்கு ஒரு ஆசை . அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறேன்,” என்கிறார் கரிகாலன்.

Read Previous

பியார் பிரேமா காதல் – டிரைலர்

Read Next

‘சார்லி சாப்ளிள் 2’ படத்தில் பாடிய செந்தில், ராஜலட்சுமி

Most Popular