‘யான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நாயகன் ஜீவா, நாயகி துளசி, இயக்குனர் ரவி கே சந்திரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், பாடலாசிரியை தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித உரிமை பற்றிய படம், மொராக்கோவில் படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம் என ‘யான்’ குழுவினர் படத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள ஜீவா இருக்குமிடமாச்சே, பேச்சு அப்படியே ‘மச்சி…ஒரு குவார்ட்டர் சொல்லேன்…’ பக்கம் திரும்பியது.
ஒரு நாளிதழ் நிருபர் ஜீவாவிடம், ‘உங்களது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் நிறைய இருக்கிறது, டாஸ்மாக் வியாபாரமும் 25000 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார்கள், உங்கள் படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளை குறைக்கலாமே,” என்றார்.
அதற்கு பதிலளித்த ஜீவா, நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, “டாஸ்மாக்’ல அவ்வளவு வியாபாரம் நடக்குதால், எனக்கும் ஷேர் கேட்கலாம் போல இருக்குதே. நான், எங்க போனாலும் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லுன்னு…’ சொல்றாங்க.
கல்யாண வீட்டுக்குப் போனாலும் சரி, சாவு வீட்டுக்குப் போனாலும் சரி…அந்த படமும் வசனமும் அவ்வளவு ரீச்சாகிடுச்சி. நான் என்னங்க பண்றது, நீங்க படத்தோட டைரக்டர்ங்ககிட்டதான் கேக்கணும். அவங்க அப்படி எழுதறதால நானும் நடிக்கிறேன், ” என்றார்.
உடனே மற்றொரு நிருபர், “அப்ப உங்களுக்குலாம் சமூகப் பொறுப்பே இல்லையா’ என கோபத்துடன் கேட்க ஜீவா, சமாளித்துப் பதில் சொல்வதற்குள் உடனிருந்த பாடலாசிரியை தாமரை, “நீங்க கேக்கறது சரியானதுதான் , இன்றைய தலைமுறை நடிகர்களும், இயக்குனர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என நானும் முடிந்த அளவிற்கு பேசி வருகிறேன், ” என்றார்.
அடுத்து பேசிய இயக்குனர் ரவி கே. சந்திரன், “யான்’ படத்துல அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் கிடையாது,” என்றார்.
ஆனால், அதற்கு சிறிது நேரம் முன் அவரே, “என் பையன் கூட படத்துல ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்…’ என்ற வசனம் கண்டிப்பாக வைக்கணும்னு கேட்டுக்கிட்டான்,” என்றார். என்ன ஒரு பெருமை…
நாலு பேருக்கு தையல் மிஷின் கொடுப்பதும், நோட்டு புக்கு கொடுப்பதும் மட்டுமே சமுதாயத்திற்கு செய்யும் உதவி என நினைக்கும் ஜீவா போன்றவர்களுக்கு, சமுதாயக் கடமை என்றால் என்ன என்பதை…யார் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது…