‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஆகியோரைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு உதவி இயக்குனரும் இயக்குனராகிறார்.
அவரிடம் பல படங்களுக்கு உதவி இயக்குராகப் பணிபுரிந்த ராஜு கணபதி, மயூகா கிரியேசன்ஸ் என்னும் புதிய படநிறுவனத்தின் சார்பில் சாய் பிரசாத் தயாரிக்கும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
“ ராஜூ என்னுடன் இணை இயக்குநராகப் பணி புரிந்த போது அவரின் வேலையைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். என்னுடன் நிறைய பயணம் செய்திருக்கிறார். நான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று இயக்கிய என் எல்லா மொழி படங்களிலும் என்னுடன் பணியாற்றிய ராஜூ, தற்போது நான் துவக்கி வைக்கும் இந்தப்படத்தின் மூலம் பெரிய இயக்குனராவார் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு ” என்று கூறி அவரை வாழ்த்தினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
பிரபல ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகரிடம் பல படங்களில் பணியாற்றிய ஜெயப்ரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கி, ஹைதராபாத்திலும், சென்னையிலும் நடக்க உள்ளது.