பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சிவாஜிகணேசன், ராதா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘முதல் மரியாதை’ படத்தின் பின்னணி இசை இன்றளவும் பேசப்படும் ஒன்று. அந்த படத்தின் பின்னணி இசையில் பலவித மாயாஜாலங்களை ஏற்படுத்தியிருப்பார் இளையராஜா.
அதிலும் குறிப்பாக, அந்த இளவட்டக் கல்லை, சிவாஜிகணேசன் தூக்க முயற்சிக்கும் போது வரும் பின்னணி இசை, ராதாவின் பாதம் மண்ணில் படும் போது சிவாஜிகணேசன் அசைந்து துடிக்கும் போது வரும் பின்னணி இசை, தீபனும், ரஞ்சனியும் சந்தித்துக் கொள்ள ஆற்றங்கரையில் ஓடி வரும் போது வரும் பின்னணி இசை என அந்தப் படத்தை உயிர்ப்பூட்டியது இளையராஜாவின் பின்னணி இசையே.
அது மட்டுமா, படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்டாகி இன்று வரை பல மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டு, ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்த படத்தின் பின்னணி இசை அமைத்து அனுபவத்தைப் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நேற்று நடந்த ‘மேகா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் இளையராஜா.
“முதல் மரியாதை’ படத்தை முதல்ல பார்த்ததுமே அன்னைக்கு இருந்த மனநிலைல , எனக்கு அந்தப் படம் பிடிக்கலை. எனக்குப் படம் பிடிக்கலைன்னு பாரதிராஜா ஒரு மாதிரியா இருக்காரு. எப்பவுமே என் கருத்தை வெளிப்படையா சொல்லிடுவேன். படத்துக்கு கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாடி, சிவாஜி ஜெயில்ல இருக்கும் போது ராதா வர்ற சீனு, இசையமைச்சிட்டு பாரதிராஜாவைக் கூப்பிட்டு படத்தைப் போட்டுக் காட்டினேன். அவர் கண்ணுல இருந்து கண்ணீரா வருது, உணர்ச்சிவசப்பட்டு, அப்படியே என் கையைப் பிடிச்சிக்கிட்டு, ‘உனக்குப் பிடிக்காத படத்துக்கே இவ்வளவு அருமையா இசையமைச்சிருக்கியேன்னு” சொன்னாரு.
இந்த விஷயம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது, இண்டஸ்ட்ரில இருக்கிறவங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரைக்கும் இசைங்கறது எனக்கு சரஸ்வதி மாதிரி. உன் படம் பிடிக்குது இல்லைங்கறது வேற, என் பர்சனல். எனக்குப் படம் பிடிக்கலையா, பிடிக்கல. ஆனா நான் செய்யற தொழிலுக்கு துரோகம் செய்ய மாட்டேன். இசைங்கறது எனக்கு சரஸ்வதி மாதிரி, நான் கூப்பிட்டதும் ஏழு ஸ்வரங்களுக்கும் வருது இல்லையா. அதுக்கு நான் வந்து உண்மையா இருக்கணும்னு அவர் கிட்ட சொன்னேன்.
இந்த ‘மேகா’ படத்தோட டைரக்டர் கார்த்திக் ரிஷி, நல்ல ஸ்கிரீன் ப்ளே பண்ணியிருக்காரு. நல்லா பண்ணியிருக்காரு. முதல் படத்தையே இப்படி பண்ணிட்டியே அடுத்த படத்தை எப்படி பண்ணப் போறேன்னு அவர்கிட்ட கேட்டேன், அதுதான் இந்த படத்துக்கு ஆசீர்வாதம், ” என ஒரு சுவாரசியமான சம்பவத்தை பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தெரிவித்தார்.