தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், ஃபெப்ஸி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து திரைப்பட விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்ததைக் கண்டித்து தமிழ்த் திரைப்பட ஊடகவியலாளர்களின் சம்மேளனம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு திரைப்பட நிகழ்ச்சிகளை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.
சில தொலைக்காட்சிகள், சில நாளிதழ்கள், சில இணையதளங்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்ற அவர்களது முடிவுகளை பல்வேறு இணையதள ஊடகங்கள், பத்திரிகையார்கள் போன்றோர் கண்டித்து வருகிறார்கள்.
இதனிடையே திரைப்பட அமைப்புகளின் முடிவில் நடிகர் சங்கத்துக்கு எந்த தொடர்புமில்லை என்று நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த முடிவு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுதான், நடிகர் சங்கத்தின் முடிவு அல்ல, அவற்றைப் பற்றிக் குழப்பிக் கொள்ள வேண்டாம்,” என்று அவர் கூறியிருக்கிறார்.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்றைய காலத்தில் இணைய ஊடகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தக் காலத்தில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டதை ஏற்றுக் கொண்ட திரையுலகினர் ஊடகங்களின் வளர்ச்சியில் மற்றொரு பரிமாணமாக வந்துள்ள இணையதளங்களுக்கு எதிராக எடுத்துள்ள முடிவு ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
சினிமா பத்திரிகையார்களின் புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழ்த் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.