‘மூவி ஃபண்டிங்’ – தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி…

Movie Funding Launch_00012தமிழ்த் திரையுலகில் பலரும் இணைந்து பணம் போட்டு முதலீடு செய்து திரைப்படங்களைத் தயாரிக்கும் நோக்கத்தில் ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து பல திரைப்டங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய ‘கேள்விக்குறி’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த ஜெய்லானி, சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தை இயக்கிய முத்துராமலிங்கன் இருவரும் இணைந்து இந்த ‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.

குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை தயாரிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெய்லானி.

‘குரூப் ஃபண்டிங்’ என்று சொல்லப்படும் பல பேர் முதலீட்டில் நல்ல திரைப்படங்களை தயாரிக்கும் வழக்கம் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அந்த முறையை இந்தியாவிலும் பிரபலப்படுத்தும் முயற்சி தான் இந்த ‘மூவி ஃபண்டிங்’. இதன் பரீட்சார்த்த முயற்சியாக நானே இயக்கும் ‘சவுண்ட் கேமரா ஆக்ஷன்’ என்ற படத்தையும், முத்துராமலிங்கன் இயக்கும் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ என்ற படத்தையும் முதலில் தயாரிக்க உள்ளோம். இதற்கான முதலீடு கிடைத்ததும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்,” என்கிறார் ஜெய்லானி.

கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘லூசியா’ மற்றும் ஹிந்தியில் வெளியான ‘முனீர்’ ஆகிய படங்கள் இந்த முறையில் தயாராகி ஹிட்டான படங்கள். அந்த தயாரிப்பு முறையைப் பின்பற்றி தமிழ் திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளது இந்நிறுவனம்.

இந்நிறுவன அறிமுக நிகழ்ச்சியில், ‘சவுண்ட் கேமரா ஆக்ஷன்’ இணையதளம் நடத்தி 2014 – சிறந்த திரைக்கதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

150 திரைக்கதைகள் போட்டியிட்ட இந்தப் போட்டியில் முழு திரைப்படத்துக்கான 5 திரைக்கதைகள் மற்றும் குறும் படத்துக்கான 5 திரைக்கதைகளும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழை பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார், இயக்குனர் மீரா கதிரவன் ஆகியோர் வழங்கினர்.

திரைக்கதைப் போட்டியில் வென்றவர்களுக்கும் அந்த திரைக்கதையைப் படமாக்குவதற்கான முயற்சிகளிலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் நிறுவனம் உதவி செய்ய உள்ளதாம்.

இந்தப் புதிய முயற்சி வெற்றி பெற்றால் பல புதிய திறமைசாலிகள் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைக்க வாய்ப்பாக இருக்கும்…

மேலும் விவரங்களுக்கு…..  www.moviefunding.in

 

Read Previous

ஷங்கரைக் கவர்ந்த ‘கத்தி, மெட்ராஸ்’ பாடல்கள்…

Read Next

விஜய் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…