மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. இப்படம் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்கி வருகிறார். தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்தான் ஆரம்பமானது. மொத்தம் 40 நாட்களுக்குள் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன், கெளதமி இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
குடும்பப் பின்னணியில் ஒரு பரபரப்பான த்ரில்லர் கதைதான் ‘பாபநாசம்’.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து கமல்ஹாசன் தற்போது மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக ‘உத்தம வில்லன், விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
முதலில் எந்தப் படம் வெளிவர உள்ளது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது….