தமிழ்த் திரையுலகில் திருமணத்திற்கு முன்னர் வரை முன்னணி நடிகையாக விளங்கியவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே ஒதுங்கி இருந்தார்.
ஒரு மகள், ஒரு மகன் என பாசமான அம்மாவாக வலம் வந்தவர் மீண்டும் நடிக்க வருகிறார் என சில வாரங்களுக்கு முன்னர் வந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
செய்தி வந்தாலும், அவர் அநேகமாக நடிக்க வரமாட்டார் என்றே சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு இன்று முதல் மீண்டும் தமிழ்ப் படத்தல் நடிக்க வந்துவிட்டார் ஜோதிகா.
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஹெவ் ஓல்ட் ஆர் யு’ படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. இந்தப் படத்தின் கதை நாயகியைச் சுற்றியே நகரும் கதை என்பதால் இப்படிப்பட்ட படம் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைவது பொருத்தமாக இருக்கும் என்றுதான் ஜோதிகா ரீமேக் படத்தைத் தேர்ந்தெடுத்தார் என்கிறார்கள்.
மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ்தான் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.