ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளி வரும் ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று ஏற்கெனவே சென்னையை அடுத்த மிஞ்சூரைச் சேர்ந்த கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்து பின்னர் வாபஸ் பெற்று விட்டார்.
இந்த சூழ்நிலையில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவராகப் பணியாற்றிய நரசிம்மராவ் என்பவர் ‘கத்தி’ படத்தின் கதை அவருடையது என தெலுங்குத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்தச் சங்கத்திலும் ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் கதையைப் பதிவு செய்து வைத்துள்ளாராம். அவருடைய புகாரை ஏற்றுக் கொண்ட அவர்கள் இது தொடர்பாக சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையைத் தொடர்பு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
‘நண்பன்’ பட சமயத்தில் உதவி இயக்குனராக இருந்த போது நரசிம்மராவ் விஜய்யிடம் ‘கத்தி’ படத்தின் கதையைக் கூறினாராம். கதையின் மீது அதிக ஆர்வம் கொண்ட விஜய் அந்தக் கதையை பல முறை திரும்பத் திரும்பக் கேட்டாராம். அதன் பின் நரசிம்மராவிடம் கதையின் உரிமையைக் கொடுத்து விடுங்கள் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கிக் கொள்கிறேன் என்று சொன்னதாகவும் தெரிகிறது. ஆனால், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
‘கத்தி’ படம் தற்போது தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகத் தயாராக இருந்த நிலையில் படத்தை வெளியிடுவதை தள்ளி வைத்து விட்டார்களாம். நரசிம்மராவ் அளித்த புகார்தான் அதற்கான உண்மைக் காரணம் என்கிறார்கள். தெலுங்குத் திரையுலகில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதை முன்னின்று தீர்த்து வைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகரான தாசரி நாராயணராவ் இந்தக் ‘கத்தி’ கதை விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறாராம்.
இதற்கான நியாயமும், தீர்வும் கிடைக்கும் வரை ‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகவே முடியாது என்றும், மேற்கொண்டு விஜய் படங்களோ, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களோ அங்கே வெளியாகவே வாய்ப்பிருக்காது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கத்தி’ கதை விவகாரம் மிஞ்சூர் கோபி விஷயத்தில் ஒரு முடிவை எடுத்து விட்டதாக நினைக்கப்படும் சூழ்நிலையில், நரசிம்ம ராவ் மூலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது தெலுங்குத் திரையுலகினரிடையேயும், தமிழ்த் திரையுலகினரிடையேயும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.