இயக்குனர் கே.பாலசந்தரால் ‘மூன்று முடிச்சு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை, இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ‘மூன்று முடிச்சு’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலசந்தர் இயக்கிய ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார்.
ஸ்ரீதேவி தற்போது துபாயில் இருப்பதால் பாலசந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வரவில்லை. டிவிட்டர் வலைத்தளத்தில் பாலசந்தருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“பாலசந்தர் சார் மறைந்து விட்டார், லட்சக்கணக்கான திரை ரசிகர்கள் மனதில் அந்த மாமேதை வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்னைப் போன்ற நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு அளித்தும், வழிகாட்டியாகவும் இருந்தவர் அவர்.
அவருடைய படங்களும், அவருடைய முடிவுகளும் வெளிப்படையானவை. ஒரு நாள் அவர் ஒரு குழந்தை நட்சத்திரத்தை நாயகியாக்க முடிவு செய்தார். ‘மூன்று முடிச்சு’ என் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு படம்.
தமிழ் சினிமாவும், என்னைப் போன்ற பலரும் அவருடைய நிழலில் வளர்ந்தவர்கள்தான். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எப்போதும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்,” என தெரிவித்துள்ளார்.