‘லிங்கா’ பட வசூல் சம்பந்தப்பட்ட விவகாரம் நேற்று கடுமையாக சூடு பிடித்தது. ‘லிங்கா’ படத்தை வாங்கியதால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
அதன் பின்னர் நேற்று மாலையே ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பாக டி.சிவா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
அப்போது பேசிய ராக்லைன் வெங்கடேஷ், “நான் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த திரைப்படத் துறையில் இருக்கிறேன். இதுவரை 37 படங்களைத் தயாரித்திருக்கிறேன். இந்த வியாபாரத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். அப்படியிருக்க ‘லிங்கா’ படம் வெளியான நான்கு நாட்களுக்குள்ளாகவே திருச்சி வினியோகஸ்தர் சிங்காரவேலன், மீடியாக்களைச் சந்தித்து படம் நஷ்டமடைந்தது என்று கூறி ‘லிங்கா’ படத்தை முற்றிலுமாகக் கொலை செய்துவிட்டார்.
‘லிங்கா’ படம் என்னுடைய குழந்தை, அதை எப்படி வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதற்குள்ளாக ஒரு நான்கு, ஐந்து வாரம் கூட பொறுக்க முடியாமல், அதற்குள்ளாக படம் இப்படி இருக்கிறது என ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் படத்தைப் பற்றிக் குறை கூறி ரசிகர்களிடமும், மக்களிடமும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விட்டார்.
அது மட்டுமல்ல, 45 கோடி ரூபாய் செலவு செய்த படத்தை 220 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து மொத்த பணத்தையும் கர்நாடகாவிற்கு கொள்ளையடித்துச் சென்று விட்டார் என்றெல்லாம் பேசுகிறார். அவர் அதற்கான ஆதாரத்தை ஒரு பத்து பேரின் முன்னால் சமர்ப்பித்து, அது உண்மை என்று நிரூபணம் செய்தால் உடனே நான் மொத்த நஷ்ட ஈட்டையும் அவருக்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அங்கேயே பகிரங்கமான மன்னிப்புக் கேட்க வேண்டும்.
‘லிங்கா’ படத்திற்காக யாரிடமும் பணம் வாங்காமல் என் சொந்தப் பணத்தைப் போட்டு படமெடுத்திருக்கிறேன். நானும் ஒரு ரஜினிகாந்த் ரசிகனாக இருந்து இன்று அவரை வைத்து படமெடுக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறேன்.
படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். கடந்த காலங்களில் கூட படங்கள் நஷ்டமடைந்த போது, ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால், மீடியாக்கள் முன் யாரும் குற்றம் சுமத்தி, ரஜினி அவர்களின் இமேஜுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதில்லை.
என் மீது வழக்குத் தொடர்ந்தால் அதை நானும் சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளேன். பல தயாரிப்பாளர்களும் எனக்கு போன் செய்து நஷ்ட ஈட்டைத் திருப்பியெல்லாம் தராதீர்கள், அதுவே தவறான முன்னுதாரணமாகி விடும் என்று சொல்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு பூஜை போட்ட அன்றே டிசம்பர் 12ம் தேதிதான் வெளிவர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்திருந்தோம். அது பற்றி எல்லாம் தெரிந்துதான் வந்து படத்தை வாங்கினார்கள். இப்போது வந்து அனைத்தையும் குறை சொல்வது தவறு,” என்றும் ராக்லைன் வெங்கடேஷ் பேசினார்.
தொடர்ந்து பேசிய வேந்தர் மூவீஸ் டி.சிவா, “லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்ட விதத்தில் எங்களுக்கும் நஷ்டம்தான். இருந்தாலும் மனிதாபிமானம் அடிப்படையில் நஷ்ட ஈட்டை தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். சில வினியோகஸ்தர்கள் தவறாகப் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்போது நாங்கள் பேசுவதும் தீர்வுக்கான ஒரு முயற்சிதான்,” என்று பேசினார்.
‘லிங்கா’ தயாரிப்புத் தரப்பிலிருந்து இப்போதுதான் பேசியிருக்கிறார்கள் என்பதால் இன்னும் சில நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் ஏதாவது ஒரு முடிவு கிடைக்கும் என்றே தெரிகிறது.