தலைப்பே அவ்வளவு நீளமாக இருக்கும் போது தலைப்புல இன்னும் எதை சேர்ப்பது…அதுதான் படத்தின் பெயரோடு நிறுத்தி விட்டோம்.
நகைச்சுவை வசனங்கள் பல படங்களின் தலைப்பாக வைக்கப்பட்டு வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற புகழ் பெற்ற வசனம் ஒரு படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இக்னைட் பிலிம்ஸ் மற்றும் இன்னாஸ்டார்ம் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ படத்தை எழுதி இயக்குபவர் ‘ ஏ .எல். அபநிந்திரன். விளம்பரத் துறையிலும் , வர்த்தகத் துறையிலும் அபி என்ற பெயரில் பிரபலமானவர் இவர். இயக்குனர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
‘ எந்த படத்துக்கும் தலைப்பு, விளம்பரம் செய்ய மிக முக்கிய ஆயுதமாகும். அதிலும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகள் மிக முக்கியமானது.
‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்ற இந்த தலைப்புப் பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல , கதைக்கும் மிக பொருத்தமானது.
நமது சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் கதையுடன் கூடிய படம்தான் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ .
சாரங்கராஜன் ஒளிபதிவில் , ‘காதல்’ படத்தின் பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, ஆண்டனி படத் தொகுப்பில், ஏ .செந்தில் குமாரின் கலை வண்ணத்தில், கபிலன் வைரமுத்து மற்றும் புகழேந்தி பாடல்கள் இயற்ற புதுமுகங்களோடு சில பரிச்சயமான முகங்களும் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பவர் தேவன்ஷு ஆர்யா. இணை தயாரிப்பு பிரபல ஒளிபதிவாளர் ரவி வர்மன் மற்றும் ஷெட்டி ஆகியோர்.
படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, மற்ற தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட வேலைகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நல்ல கதை அமைப்பும் , நேர்த்தியான ஒளிப்பதிவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். இந்தப் படம் எல்லா தரப்பினரையும், வயதினரையும் எல்லா நிறத்தவரையும் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்கிறார் அபநிந்திரன்.