அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்க இளையராஜா இசையைமப்பில் பால்கி இயக்கியுள்ள ‘ஷமிதாப்’ ஹிந்திப் படத்தை சென்னையில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குனர் பால்கி, தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன், இளையராஜா இருவரும் கலந்து கொள்ளவில்லை.
தனுஷ் பேசும் போது, “இந்தியில் முதல் படம் முடித்த போது அடுத்து என்ன படம் என்று கேள்வி வந்தது. எதைச் செய்வது என்ற புரியவில்லை. நல்ல கதைக்காக பல மாதங்கள் காத்திருந்தேன். பால்கி போன் செய்தார். அப்படி பால்கி சார் சொன்ன கதை பிடித்திருந்தது. இதற்காகக் காத்திருந்தது தவறில்லை என்று தோன்றியது.
அமிதாப் சாருடன் நடிப்பது பெருமைமுதலில் அவர் நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் போது கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நடிக்கவே ஆசைப்பட்டேன். நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு ஜாம்பவான். ஏற்கெனவே அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு விருது விழாவில் மேடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரைச் சந்தித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள்,என்ன கஷ்டங்களைச் சந்தித்தீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். வீட்டில் சிந்தித்து நடிக்கிற அளவுக்கு ஹோம் ஒர்க் செய்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. காலியான மூளையுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்வேன். அதில் வேண்டியதை இயக்குநர் நிரப்புவார். நான் வெளிப்படுத்துவேன். இதுதான் நடந்தது.இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது உடன் நடித்த யாரும் என்னை சிரமப்படுத்த வில்லை. ”என்றார்.
இயக்குநர் பால்கி பேசும் போது, “எல்லாரும் என்னிடம் கேட்கிற கேள்வி ஷமிதாப் யார்? என்பதுதான். இந்தப் படத்தில் தனுஷ் ஏன்..? ஷமிதாப் என்பது தனுஷா? அமிதாப்பா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.என்னைக் கேட்டால் அவர்களுக்கும் அப்பால்… வேறு ஒரு விஷயம் இருக்கிறது என்பேன். தனுஷ் திறமையான புத்திசாலியான நடிகர். அவரைப் பயன்படுத்தியிருப்பது சரியென்று படம் பார்க்கும் போது புரியும்.
படத்தில் தனுஷ், அக்ஷரா இடையில் ஹெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால் அமிதாப், தனுஷ் இடையில் பிஸிக்ஸ் இருந்தது என்று கூறுவேன். இசை என்றால் இளையராஜாதான், எனவே அவரை இசையமைக்க வைத்தோம்,” என்றார்.
அக்ஷரா பேசும் போது, “படத்தில் நடிக்கும் போது முதலில் எனக்குப் பயம் பதற்றமாக இருந்தது. இவ்வளவு பெரிய யூனிட், இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் என்று கை, கால் உதறியது. இப்படத்தில் நடித்தது மறக்க முடியாது,” என்றார்.