சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ’36 வயதினிலே’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
ஜோதிகா, ரகுமான், நாசர், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சென்னையிலுள்ள ஹோட்டல், லீலா பேலஸ்-ஸில் நடைபெற்ற இசை விழாவில் படத்தின் நாயகியாக ஜோதிகா கலந்து கொண்டு பேசினார்.
முதல் முறையாக ஒரு இசை விழாவில் கலந்து கொண்டு, தமிழில் மிக அழகாக ஜோதிகா பேசியதை விழாவுக்கு வந்த அனைவருமே உன்னிப்பாகக் கவனித்தனர். அவர் இவ்வளவு சரளமாக தமிழில் பேசுவாரா என்றும் ஆச்சரியப்பட்டனர். நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது,
“எல்லாருமே ரொம்ப வாழ்த்தி, நல்ல விதமா பேசியிருக்கீங்க. மனப்பூர்வமா உங்க எல்லாருக்கும் நன்றி. எனக்குப் பின்னாடி என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க, அவங்கதான் எனக்கு திரும்பவும் நடிக்க வர்றதுக்கான நம்பிக்கையைக் கொடுத்தாங்க.
வீட்டுல இருக்கிற பெண்கள் நிறைய வேலை பண்றாங்க, அது சாதாரண விஷயமில்லை. எனக்கு என்னோடே ஃபிரண்ட்ஸ்தான் ஒரு டிரைவிங் ஃபோர்ஸ்-ஆ அமைஞ்சாங்க. ஏதாவது நல்லது பண்ணணும்னா சுத்தி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வேணும். என் ஃபிரண்ட்ஸ்தான் எனக்கு அந்த எனர்ஜியைக் கொடுத்திருக்காங்க.
ரொம்ப முக்கியமான ஆளு, என் வீட்டுல வொர்க் பண்ற தேவி, அவங்கதான் என் பசங்களை அம்மா மாதிரி பார்த்துப்பாங்க. அவங்க வீட்டுல இருக்கிறதுனாலதான், நான் வீட்டை விட்டு வெளிய வர முடியும்.
என்னோட அப்பா, அம்மா, அவங்களுக்கு பெரிய நன்றி, என் அத்தை, மாமாவை நான் அம்மா, அப்பான்னுதான் கூப்பிடுவேன். அவங்க ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லலை, ஜோ, பசங்க வீட்டுல இருக்காங்க, திரும்ப நடிக்காதன்னு சொல்லலை. பசங்கள அப்பா காலையில ஸ்கூல்ல டிராப் பண்ணுவாங்க. அம்மா சமைச்சிக் கொடுத்தனுப்புவாங்க, பசங்களை கிளாஸ்க்கு கூட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு அவங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. ஃபேமிலிக்கு பெரிய நன்றி.
பிரியதர்ஷன் சார் என்னை அறிமுகப்படுத்தினாலும், வசந்த் சார் எனக்கு குரு. எனக்கு நடிப்புலாம் கத்துக் கொடுத்தாங்க. எங்களை ரொம்ப திட்டி, ஒரு கலர்ஃபுல்லான ஸ்டார்ட் அமைச்சிக் கொடுத்தாரு.
ராதாமோகன் எனக்கு ஒரு மிக முக்கியமான படத்தை என் வாழ்க்கையில கொடுத்தாரு. மொழி படத்துக்காக அவருக்கு பெரிய நன்றியை சொல்லணும்.
எல்லா டெக்னீஷியன்ஸும் இந்தப் படத்துக்காக ரொம்ப உழைச்சிருக்காங்க. எல்லாருடைய மனைவியும் செட்டுல இருந்திருக்காங்க. இந்தப் படத்தோட டைரக்டர் ரோஷன் ஸாருக்கு எத்தனை வாட்டி தாங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. என் கேரியரோட பெஸ்ட் பிலிம் எனக்குக் கொடுத்திருக்காங்க. ஒரு ஆண், பெண்கள் பத்தி இந்த மாதிரி ஒரு கதை எழுதியிருக்காங்க, அது பெரிய விஷயம்.
தமிழ்ல பெண்களைப் பத்தின படம் நிறைய வர்றதில்லை. ஹிந்தில, தெலுங்குல, மலையாளத்துல இதை மாதிரி அதிகமான படங்கள் வருது. தமிழ்ல கொஞ்சம் கம்மியா இருக்கு. இந்தப் படத்துல இருக்கிற எல்லாரும் பெண்களை ரொம்ப மதிக்கிறாங்க.
என் ஹஸ்பென்ட், இந்தப் படத்தோட புரொடியூசர் சூர்யா, என்னோட உலகம். சென்னையில நான் புதுசா வந்தப்போ நான் சந்திச்ச முதல் ஆள் சூர்யாதான். அப்பத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் என் பக்கத்துல ஒரு பில்லர் மாதிரி இருந்து சப்போர்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க. கணவன், மனைவிக்குள்ள தாங்க்ஸ் சொல்லக் கூடாது, இப்படிப்பட்ட மனுஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டது ரொம்ப பெருமையா இருக்கு.
இந்த நாள், இந்தப் படம் என்னால மறக்க முடியாது. இந்தப் படத்துலு நடிச்சிருக்கிற எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துல வேலை பார்த்தது ஒரு ஃபேமிலி மாதிரி இருந்துச்சி,” என ஜோதிகா நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.
ஜோதிகாவின் பேச்சை பக்கத்தில் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, “நான் கூட இந்த எட்டு வருஷத்துல இவ்வளவு சரளமா ஹிந்தியை பேச மாட்டேன். ஆனால், ஜோதிகா ‘சந்திரமுகி, மொழி’ இந்தப் படங்களோட விழாக்களுள்கெல்லாம் கூட வந்ததில்லை. முதல் முறை அவங்க மேடையில தமிழ்ல இப்பதான் பேசறாங்க,” என ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.