கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.மருதுபாண்டியன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’.
இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன், சரண்யா, பனிமலர், நிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சென்னையில் வசிக்கும் இளைஞர்களைப் பற்றிய படமாக இந்தப் படத்தை யதார்த்த்திற்கு மிக நெருக்கமாக இயக்குனர் மருதுபாண்டியன் இயக்கியுள்ளாராம். வழக்கமான திரைப்படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், இந்தப் படத்தைப் பார்த்ததுமே வாங்கி வெளியிடலாம் என ஏடிஎம் புரொக்சன்ஸ் சார்பில் வெளியிடும் மதுராஜ் தெரிவிக்கிறார்.
செல்லப் பாண்டி திரைப்பட இயக்குனராகும் கனவுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன். நிம்மதியாக உட்கார்ந்து ஒரு கதை எழுத ஆசைப்படுகிறான். ஆனால், ஒரு வார்த்தை கூட எழுத முடியாத அளவிற்கு அவன் வாழ்வில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்கள் என்ன, அந்த கதையை அவன் எழுதி முடித்தானா ? இல்லையா ? என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்களாம்.
இந்தப் படத்தைப் பார்த்த சில இயக்குனர்கள் படத்தைப் பற்றியும், இயக்குனரைப் பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்கள்.
பாரதிராஜா – நாயகன் படத்திற்குப் பிறகு நான் வியந்து பார்த்த படம் இது.
ராம் – தமிழின் தலை சிறந்த 25 படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெறுவது நிச்சயம்.
தியாகராஜன் குமாரராஜா – சினிமாத்தனம் இல்லாத நல்ல படம்.
பாலாஜி தரணீதரன் – இப்படத்தின் காட்சிகளை பார்க்கும் போது உலக சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த படம் தருகிறது.
இந்தப் படத்தில்தான் பாபி சிம்ஹா முதன் முறையாக நாயகனாக நடித்துள்ளார். ஆனால், படத்தின் லாபத்தில் பங்கு வேண்டும் இல்லை 60 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு பிரச்சனை செய்து படத்திற்கு டப்பிங் பேசக் கூட வரவில்லை. அவருக்குப் பதிலாக வேறொருவர் டப்பிங் பேசியிருக்கிறார்.
வளர்ந்து வரும் நேரத்திலேயே பாபி சிம்ஹா இப்படி பிரச்சனை செய்ததைக் கண்டு படக் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருந்தாலும் நல்ல படத்தைக் கொடுத்திருக்கும் திருப்தி அவர்களிடையே இருக்கிறது.
நல்ல படங்களைத் தரும் படைப்பாளிகளை தமிழக மக்கள் கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.
வரும் 10ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.