திரையுலகைப் பொறுத்தவரையில் ஒரு சிலர் முற்றிலுமாக மறக்கும் ஒரு விஷயம் ‘நன்றி’. இந்த இளைய தலைமுறையாவது நன்றி மறக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களில் சிலரும் நன்றியை மறப்பவர்கள்தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாசி சிம்ஹா.
‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில்தான் முதன் முதலில் பாசி சிம்ஹாவை நாயகர்களில் ஒருவராக நடிக்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன். ஆனால், படம் முடிந்ததும் அந்தப் படத்தில் நடித்ததற்காக 60 லட்சம் ரூபாய் சம்பளம், அல்லது படத்தின் லாபத்தில் பங்கு ஆகியவற்றை பாபி சிம்ஹா கேட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் பாபி சிம்ஹாவை தன்னுடைய நண்பன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படத்தில் நடிப்பதற்காக அறிமுகப்படுத்தி வைத்தவரும் மருதுபாண்டியன்தான். நல்ல வாய்ப்பு அமையக் காரணமாக இருந்தவரிடமே தன் ‘செய்நன்றி’யை நன்றாகக் காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா.
இப்போது படத்தைப் பார்த்த பாரதிராஜா போன்ற பல இயக்குனர்கள் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை மனமாரப் பாராட்டி வருகிறார்கள்.
பாபி சிம்ஹா லாபத்தில் பங்கு கேட்டாரா என்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ‘உறுமீன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது அதற்கு பாபி சிம்ஹா அளித்த பதில் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
‘ஷேர்’னா என்ன ? அப்படின்னா என்வென்றே எனக்குத் தெரியாது’ என்றார். உடனே கேள்வி கேட்ட பத்திரிகையாளர் படத்தின் லாபத்தில் பங்கு கேட்டீர்களா எனத் தமிழில் கேட்டார்.
உடனே, “படத்தை ‘ஷார்ட் பிலிம்’மா எடுக்கிறன்னு சொல்லிட்டு, முழு படமா எடுத்தாங்களே அதைப் பத்தி அவங்க்கிட்ட கேட்டீங்களா,” என்றார்.
இந்த இருவிதமான பதில்களின் மூலமே பாபி சிம்ஹா ‘ஷேர்’ கேட்டாரா இல்லையா என்பது புரிந்துவிடும். அதை வாசகர்களின் யோசனைக்கே விட்டு விடுகிறோம்.
அடுத்த நாளே ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “இந்தப் படத்தின் முழுக் கதையையும் கேட்டே பாபி சிம்ஹா நடிக்க சம்மதித்தார். அவருக்கும் அவருடன் படத்தில் நடித்தவர்களுக்கும் இது குறும் படமா, முழு படமா என்பது நன்றாகவே தெரியும்,” என்றார்.
‘உறுமீன்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பாசி சிம்ஹாவின் நக்கலான பதிலால் ஆச்சரியப்பட்ட பத்திரிகையாளர்கள் ‘இப்படிப் பேசிய பல பேரை பார்த்திருக்கிறோம், அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்,” என்று பேசிக் கொண்டது நம் காதில் விழுந்தது.