பொய்யாக்கிய ‘காக்கா முட்டை’ வெற்றி – வசந்தபாலன்

‘காக்கா முட்டை’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதைப் போல, அந்தப் படத்திற்கான பாராட்டுக்களும் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே வருகிறது.

‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ போன்ற யதார்த்த படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் வசந்த பாலன், ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை மாற்றிவிட்டது என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘காக்கா முட்டை’ படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை வேறு விதமாகவும், பயமுறுத்தும் வகையிலும், பிடிபடாத வகையிலும் இருந்தது. திகில் படங்கள், பயமுறுத்தும் பேய் படங்கள், பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள், வெறும் சிரிப்பு படங்கள், திரில்லர் படங்கள், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டை ஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள், மட்டுமே ஓடிக் கொண்டிருந்த நிலையில், பார்வையாளர்கள் மொத்த பேருமே இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது.

இளம் பார்வையாளர்கள் மொத்த பேரும் இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகியது. இது ஐ போன் யுகம், ஐ பேடு யுகம், பேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப் யுகம், ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது காக்கா முட்டையின் வெற்றி. யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்கா முட்டை திரைப்படம் ஒரு தேவதூதன், என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு,” என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் வசந்தபாலன்.

கடந்த ஏழு நாட்களில் மட்டும் ‘காக்கா முட்டை’ படம் சுமார் 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Read Previous

‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார் இயக்குனராகும் படம்…

Read Next

Papanasam – Official Theatrical Trailer 2

Most Popular