தமிழ்த் திரையுலகில் அறிவியல் கலந்த அதாவது ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ என்று சொல்லக் கூடிய படங்கள் அதிகமாக வருவதே இல்லை.
ஹாலிவுட் படங்களில் அப்படி ஏதாவது படம் வந்தால் தேடிப் பிடித்தாவது அந்தப் படத்திற்குச் சென்று விடுவோம். அப்படிப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள படம்தான் ‘இன்று நேற்று நாளை’.
ரவிக்குமார் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டதற்கு இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது,
“இந்தப் படம் வந்த பிறகு, சினிமா ஆசையில் இருக்கிற பலரும் பலவிதமான கதைகளை கண்டிப்பா யோசிப்பாங்க.
இந்தப் படத்தை இயக்கிறதுக்கு முன்னாடி தயாரிப்பாளர் கிட்ட மூணு விதமான கதைகளைக் கொடுத்தேன். அவர் இந்தக் கதையை செலக்ட் பண்ணாரு. எனக்குக் கொடுக்கப்பட்ட பட்ஜெட்ல ஒரு நிறைவான படத்தை எடுத்து முடிச்சிருக்கேன்.
‘டைம் மிஷின்’ பத்தின கதை இது, அதனால நாம என்ன வேணால் கற்பனை பண்ணி கதை எழுதலாம். ஆனால், படமா கொடுக்கும் போது எது சுவாரசியமா இருக்குமோ அதை மட்டுமே இந்தப் படத்துல சேர்த்திருக்கேன்.
‘இன்று, நேற்று, நாளை’ன்னு பார்ட் பார்ட்டா கதை சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா சொல்லியிருக்கேன்.
படம் பார்க்க வர்ற அனைத்து ரசிகர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்கறத மட்டும் உறுதியா சொல்வேன்,” என புதுமையான படத்தைக் கொடுத்த திருப்தியில் இருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.