எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

1200 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள எம்.எஸ்.விஸ்வாதன் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பாலக்காடு அருகே உள்ள எலப்பள்ளியில் 1928ம் ஆண்டு பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

‘காதல் மன்னன்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்துமிருக்கிறார்.

எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்எஸ்ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், பல இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

‘பணம்’ திரைப்படத்தில் விஸ்வநாதன் அவருடைய நண்பர் ராமமூருத்தி இருவரையும் இணைத்து இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

தொடர்ந்து 13 ஆண்டுகள் இருவரும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற பெயரில் இணைந்து இசையமைத்து பல வெற்றிகரமான பாடல்களை உருவாக்கியுள்ளனர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துடன் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின் தனித் தனியாக இசையமைக்கத் தொடங்கினர்.

இருப்பினும் 1995ம் ஆண்டு மீண்டும் இணைந்து சத்யராஜ் நடித்த ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்திற்கு இசையமைத்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் தனியாக 500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இளையராஜாவுடனும் இணைந்து ‘இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், மெல்லத் திறந்தது கதவு, விஷ்வ துளசி,’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2013ல் வெளிவந்த ‘தில்லு முல்லு’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். அந்தப் படத்திற்கான ஒரு பாடலிலும் நடித்துக் கொடுத்துள்ளார்.

காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களைக் கொடுத்துள்ள எம்எஸ்வியின் இசை மழை இந்தக் காற்றில் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

Read Previous

‘எந்திரன், ஐ’ சாதனையை முறியடிக்கும் ‘பாகுபலி’

Read Next

Legendary composer MSV is no more