தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படம் இந்திய திரையுலகத்தையும் வியக்க வைத்து, உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழிலும் இந்தப் படம் பிரமாதமான வெற்றியைப் பெற்றிருப்பதால் ‘பாகுபலி’ பிரபாஸும், ‘சிவகாமி’ ரம்யா கிருஷ்ணனும் ‘பாகுபலி’ படக் குழுவினர் சார்பாக நன்றி சொல்ல வந்திருந்தனர்.
கூடவே, படத்தை தமிழில் பெருமையுடன் வழங்கிய தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குனர்கள் லிங்குசாமி, ராஜேஷ், சாம் ஆன்டன், இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ‘பாகுபலி’யைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.
அனைவரும் சுருக்கமாகப் பேசி முடிக்க, பத்திரிகையாளர்களின் கேள்விதான் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பைக் கிளப்பியது. ‘பாகுபலி’ படத்தில் தமிழ் நடிகர்களை நடிக்க வைத்திருக்கக் கூடாது என தமிழ்ப் படங்களில் நடித்து அதிகம் சம்பாதித்த தெலுங்கு நடிகரான சுரேஷ் டிவீட் செய்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
‘பாகுபலி’ படத்தில் தமிழ் நடிகர்களான சத்யராஜ், நாசர் பற்றித்தான் சுரேஷ் அப்படி ஒரு டிவீட்டைச் செய்திருந்தார். அதற்கு பிரபாஸ் அளித்த பதில்தான் மிகவும் நெகிழ்ச்சியானது. திரைப்படக் கலைஞர்கள் மொழி என்ற எல்லையைத் தாண்டியவர்கள் என்பதை உணர வைத்தது.
“பாகுபலி’ படத்தில் சத்யராஜ் சாரை நடிக்க வைப்பதற்காக அவரைச் சந்தித்துப் பேச சென்னைக்கு வந்தார் இயக்குனர் ராஜமௌலி. நான் சத்யராஜ் சார் என்னுடைய அப்பாவாக ‘மிர்ச்சி’ படத்தில் ஏற்கெனவே நடித்திருந்ததால் அவருடன் எனக்குப் பழக்கம் உண்டு.
சத்யராஜ் சாரிடம் அவர் தலை மீது நான் காலை வைக்கும் காட்சியைப் பற்றியும் சொல்லி விடுங்கள் என்று சொன்னேன். அவரும் இதைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டார். முழு கதையையும் சொல்லுங்கள் என்று சத்யராஜ் சொன்ன பிறகு ராஜமௌலி முழு கதையையும் சொல்லியிருக்கிறார்.
படத்தின் ஹைலைட்டான காட்சியே அதுதானே சார், எனக்கு அந்தக் காட்சியில் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால், எனக்குத்தான் அந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் தயக்கமாக இருந்தது. முழு ‘பாகுபலி’ படத்தில் நான் டென்ஷனாக நடித்த காட்சி அது ஒன்றுதான்,” என்று சத்யராஜின் நடிப்பைப் பற்றியும், அந்தக் காட்சியில் நடிப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்தைப் பற்றியும் தெரிவித்தார் பிரபாஸ்.
சத்யராஜும் சரி, பிரபாஸும் சரி மொழியைத் தாண்டி சினிமாவையும், மனிதர்களையும் நேசிக்கும் கலைஞர்களாகவே இருக்கிறார்கள். திரையுலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.