ரால்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நாகராஜன் இயக்கி வரும் படம் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’.
இந்தப் படத்தில் ரிஜன் நாயகனாக நடிக்க, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்துள்ள அர்ஷிதா நாயகியாக நடிக்கிறார். மற்றும் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், ‘சதுரங்க வேட்டை’ வளவன், மகாநதி சங்கர், கலை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்கி வரும் நாகராஜன் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
ஒரு அருமையான முருகர் பாடலின் வரிகளின் சாயலில் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்களே என்றதற்கு,
“வேண்டுமென்றே வைத்த பெயர் இல்லை. கதாநாயகியின் பெயர் அமுதா என்று வைத்தோம். வட சென்னையில் நடக்கக் கூடிய ஒரு அழகான காதல் கதைதான் இந்தப் படம். அமுதாவை துரத்துத் துரத்தி நாயகன் காதலிக்கிறான். அவள் விரட்டி விட்டாலும் கூட அவளைத் தொடர்வதை அவன் நிறுத்தவே மாட்டான். அதனால்தான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ என பெயர் வைத்தோம். படத்தின் பெயரே இது காதல் படம்தான் என்பதைப் புரிய வைக்கும்.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் இதுவரை யாரும் படமாக்காத சில இடங்களில் படமாக்கியுள்ளோம். வட சென்னை மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அங்குள்ள மக்கள் மிகவும் பாசமானவர்கள். எனக்கு வட சென்னையைச் சேர்ந்த பலர் நண்பர்கள். அவர்கள் வீட்டுக்கு சென்றால் சாப்பிடாமல் நம்மை அனுப்பவே மாட்டார்கள்.
இதற்கு முன் தமிழில் சில வட சென்னை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் மிகவும் யதார்த்தமான ஒரு காதல் கதையாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் நாகராஜன்.
இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. அது முடிந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்கிறார் இயக்குனர்.