20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் கதை சொன்ன ‘ராட்சசன்’ இயக்குனர்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’.

‘முண்டாசுபட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

படம் பற்றி நாயகன் விஷ்ணு விஷால் நேற்றைய விழாவில் பேசியதாவது,

“முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், கொஞ்ச நாள் ஆகும் என்றார். பின் அந்தக் கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையைச் சொன்னார். கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன்.

பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோது, எனக்குத்தான் இந்த கதை என்ற உணர்வு எழுந்தது. கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார்.

படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்,” என்றார் நாயகன் விஷ்ணு.

படத்தின் இயக்குனர் ராம்குமார் பேசுகையில்,

“முண்டாசுப்பட்டி’ படத்துக்குப் பிறகு இந்தக் கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். சீரியஸ் படம் என்ற உடனே அவர்கள் யோசித்து சொல்கிறேன் என சொல்லி விட்டார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்.

விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். படத்தை பார்க்கும்போது இந்தக் குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும். காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நல்ல நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பிவி சங்கர் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். இந்த படம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அருண்ராஜா காமராஜ். திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது,” என்றார் இயக்குனர் ராம்குமார்.

Read Previous

திமிரு புடிச்சவன் – தீம் பாடல்

Read Next

ராட்சசன் – இசை வெளியீடு புகைப்படங்கள்

Most Popular