அதிகாலை காட்சி, காசிக்கும் காசிக்கும் சண்டை ?

சென்னையில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவருகிறதென்றால் அசோக் நகரில் உள்ள காசி தியேட்டரில் அதிகாலை சிறப்புக் காட்சி நடைபெறும்.

சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் அதிகாலைக் காட்சியை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களை விட இங்கு நடைபெறும் காட்சிக்கு சிறப்பு பெருமை உண்டு.

இப்போது அந்தப் பெருமை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு காசி தியேட்டர் பின்புறம் காசி டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது. காசி டாக்கீஸ், காசி தியேட்டருக்குப் போட்டியாக உருவாகிவிட்டதாக திரையுலக வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி காசி தியேட்டரிலும், காசி டாக்கீசிலும் முன்பதிவு செய்யப்பட்டது.

காசி தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு ஒரு காட்சியும், காசி டாக்கீசில் அதிகாலை 5, 5.15, 5.30, 5.45 என 4 காட்சிகளும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன.

இப்போது காசி தியேட்டர் அதன் அதிகாலை 5 மணி சிறப்பு காட்சியை ரத்து செய்துவிட்டது. சிம்பு ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் அங்கு படத்திற்காக பல பேனர்கள், கட்அவுட்டுகள் வைத்திருந்த நிலையில் தற்போது காட்சி ரத்தானது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

காசி டாக்கீசில் சிறப்பு காட்சிகள் நடைபெறுவதும் நாளைய தினம் அங்கு மட்டும் 20 காட்சிகளும் ஏறக்குறைய ஹவுஸ்புல் ஆனதும் காசி தியேட்டருக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த சண்டைதான் காசி தியேட்டர் அதன் அதிகாலை காட்சியை ரத்து செய்துவிட்டது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர் வட்டாரங்களில் இது குறித்து தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Read Previous

ராட்சசன் – இசை வெளியீடு புகைப்படங்கள்

Read Next

செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்

Most Popular