‘தனி ஒருவன்’ – என் இதயத்திலிருந்து வந்த படம் – மோகன் ராஜா

‘தனி ஒருவன்’ தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க ஒரு திரைப்படமாக மாறியிருக்கிறது. இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களில் இந்தப் படம் தனித்த பெயரையும் வாங்கியிருக்கிறது.

ரசிகர்கள் அளித்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்த போது, படத்தின் இயக்குனர் அண்ணன் மோகன் ராஜாவும், தம்பி நாயகன் ஜெயம் ரவியும் ஒருவருக்கொருவர் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார்கள்.

மிகவும் யதார்த்தமாகவும், மனதில் உள்ளதை வெளிப்படையாகவும் பேசி ரசிக்க வைத்தார் மோகன் ராஜா.

“இப்படி ஒரு வெற்றியை அனுபவிக்க எந்த ஒரு இயக்குனரும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும். வரம் வாங்கி வந்திருக்கிற மாதிரிதான் எனக்கு தோணுது, ரசிகர்கள் கொடுத்த வரம் இது.

12 வருஷமா திரிசங்கு சொர்க்கத்துல வாழ்ந்த மாதிரியான ஒரு அனுபவம். நான் பூமியில இருக்கனா, நடுவுல இருக்கனா, ஆகாயத்துல இருக்கனா, நல்ல டைரக்டர்னு சொல்றாங்க, பாதி பேர் இல்லன்னு சொல்றாங்க. என் வாழ்க்கையில என்ன நடக்குது. இதை ரசிக்கிறதா, வேண்டாமா, நான் இயக்குனரா, இல்லையா, டைப் டைப்பா கேள்வி கேட்டுட்டிருந்தாங்க.

அதையெல்லாம் மனசுல ஏத்திக்காம, செய்யறத ஒழுங்கா செய், வர்றது தானா வரும்னு எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். அது அப்பா சொல்லிக் கொடுத்தது. முதல் நன்றி எங்க அப்பாவுக்கு, ஒரு நல்ல சினிமாவுக்கான ரசனையை எனக்குள்ள திணிச்சாங்க. அப்பாவுக்கான நன்றிக் கடனாதான் இந்தப் படத்துல மோகன் ராஜா-ன்னு பெயர் வச்சிக்கிட்டேன்.

இந்தப் படத்துக்கு 2008ல அட்வான்ஸ் வாங்கினேன். இடைப்பட்ட இந்தக் காலத்துல சில ஹீரோக்கள் கூப்பிட்டாங்க. ரீமேக் படம்தான் பண்ணனும்னு கேட்டாங்க, நான் கதை சொல்றத கேக்க அவங்களுக்கு நேரமில்லை. அதெல்லாம் நல்லதுக்குதான்னு தோணுது. பெரிய பெரிய மியூசிக் டைரக்டர்ஸ் இந்தக் கதையை கேட்டுட்டு மியூசிக் பண்ண ஸ்கோப் இல்லன்னு மறுத்தாங்க. இன்னைக்கு எல்லாரும் வாழ்த்தறாங்க.

ஒரு ஷார்ட் பிலிம் எடுத்த இயக்குனரை நம்பும் போது சினிமாவுல பொறந்து வளர்ந்த நம்மள நம்பலையேன்னு ஒரு வருத்தமிருக்கும். அதை நாம செயல்லதான் காட்டணும். 12 வருஷமான பிறகும் பியூச்சருக்கான, ஒரு அப்டேடட் படம் நான் கொடுத்திருக்கன்னு எல்லாரும் சொல்லும் போது சந்தோஷமா இருக்கு.

இன்னைக்கு இருக்கிற இளைஞர்களை முழுக்க முழுக்க நம்பி எடுத்த படம் இது. மக்கள் தெளிவா இருக்காங்க, ஆனால் நாம வேற படம் காட்டினா பார்ப்பாங்களேன்னு யோசிச்சேன். நிறைய பேர் இந்தப் படத்தை எப்படிப் பார்ப்பாங்கன்னு கேட்டாங்க. ஆனால், நான் நம்பிக்கையோட இந்தப் படத்தை செய்தேன்.

இந்தப் படம் கதை அல்ல, ஒரு திரைக்கதை. திரைக்கதையில் என்னை ஒரு தவறு கூட செய்யாமல் சுபா பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்த செய்ததால்தான் இப்படி படத்தைக் கொடுக்க முடிஞ்சுது.

அரவிந்தசாமி சார் என்னை நம்பினாரு, இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய வெற்றி கிடையாது. எனக்கும் என் தம்பிக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி. ரவி என்னை நம்பினாரு, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாரு.

கமர்ஷியல் ஃபார்முலாவை உடைச்சி, மிகப் பெரிய கமர்ஷியல் வெற்றியை கொடுக்க முடிஞ்சிருக்கு. இந்தப் படம் பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. எல்லாருமே மனப்பூர்வமாகப் பாராட்டினாங்க. மேலும் நல்ல சினிமாவைக் கொடுக்கும் உத்வேகத்தை அந்தப் பாராட்டுக்கள் கொடுத்துள்ளன.

என் இதயத்தில் இருந்து வந்த படம் இது. பணத்துக்காக எடுக்கப்பட்ட படமில்லை இது.

ஒருவன் நல்லது செய்ய அவனுக்குள் வரும் கோபம் போதும். கதாநாயகனுக்குள் ஒரு கோபத்தை வைக்கணும், அது எல்லாத்தையும் செய்யணும்னு நினைச்சேன், அது நடந்திருக்கு. இந்தப் படத்துல நடிச்ச யாரும் என்னை ‘ரீமேக் ராஜா’ன்னு நினைக்கலை, என்னை நம்பி வந்தாங்க. என் கதைக்கு, என் எண்ணத்திற்கு ஒவ்வொருவரும் உயிர் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருடைய அறிவையும் நான் பயன்படுத்திக் கொண்டேன், நான் அறிவாளி அல்ல, உழைப்பாளி. இந்தப் படத்துக்கு உழைச்சேன் ஜெயிச்சுது, அடுத்த படத்துக்கு உழைச்சால் அது ஜெயிக்கும்.

நயன்தாராக்கு இந்தப் படத்தைப் பார்த்துட்டு நம்ப முடியல, நாம நடிச்ச படமான்னு அவங்களுக்கு ஆச்சரியம்.

இதுவரைக்கும் சினிமாவை டென்ஷனா லவ் பண்ணிட்டிருந்தேன், இனிமேல் சுதந்திரமா லவ் பண்ணுவேன்,” என்றார் மோகன் ராஜா.

Read Previous

‘தனி ஒருவன்’ என் நெஞ்சில் குத்திய ‘பச்சை’ – ஜெயம் ரவி

Read Next

Wedding bells for Prithvi

Most Popular