‘மெட்ரோ’ – மிரட்டலான அறிமுகத்தில் சிரிஷ்

தமிழ் சினிமாவில் வாரா வாரம் வெளியாகும் படங்களில் பல புது இயக்குனர்களும், பல புது ஹீரோக்களும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வித்தியாசமான படங்களுக்கும், இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் மட்டுமே அற்புதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி ஒரு படமாக விரைவில் வெளிவர உள்ள ‘மெட்ரோ’ படம் அமையப் போகிறது என திரையுலகத்திலேயே பேச்சு எழுந்துள்ளது.

‘ஆள்’ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் நாயகனாக புதுமுகம் சிரிஷ், நாயகியாக மாயா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் சிரிஷ் ‘மெட்ரோ’ படம் பற்றியும், தன்னைப் பற்றியும் கூறியதாவது,

“சினிமாவுல நடிக்கணும்னு எப்போதோ முடிவு பண்ணிட்டேன். ஆனால், அப்பா மறுத்தாரு, ஏதாவது பண்ணால்தான் சினிமாவுக்குப் போகணும்னு சொன்னாரு.

அப்புறம் நான் கலைராணி மேடம் கிட்ட நடிப்புப் பயிற்சி வகுப்புக்குப் போய் சேர்ந்தேன். நான் தொடர்ந்து அதற்கான பயிற்சிகள்ல இருக்கன்னு அப்பா கிட்ட சொன்ன பிறகுதான் நடிக்க சம்மதிச்சாரு. அப்புறம் பாண்டியன் மாஸ்டர் கிட்ட சண்டைப் பயிற்சி, கிரிஜா மாஸ்டர் கிட்ட நடனப் பயிற்சிலாம் போக ஆரம்பிச்சேன்.

நண்பர் மூலமா ‘மெட்ரோ’ படத்தோட இயக்குனர் ஆனந்தை சந்திச்சேன். அவர் சொன்ன கதை ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் கிட்ட சில காட்சிகள் நடிச்சி காண்பிச்சேன். அவருக்கும் திருப்தியா இருந்து அப்புறமா என்னையே இந்தப் படத்துல நாயகனா நடிக்க வச்சாரு.

இந்தப் படத்தை புது ஹீரோ பண்ணாதான் நல்லா இருக்கும். ஏற்கெனவே இருக்கிறவங்க பண்ணால், அந்த கதாபாத்திரம் ஹீரோவா, வில்லனாங்கறத கண்டு பிடிச்சிடுவாங்கன்னு என்னை ‘மெட்ரோ’ படம் மூலமா அறிமுகப்படுத்தறாரு.

சின்ன வயசுல இருந்து சினிமா மேல ஒரு ஆசை. எல்லாரும் பாராட்டறதும், கிண்டல் பண்றதும் சினிமாவுல மட்டும்தான் கிடைக்கும். படிப்பை விட சினிமா மேலதான் ஆர்வம் அதிகமா இருந்துச்சி.

என்னோட முதல் படமே ‘மெட்ரோ’ மாதிரி ஒரு த்ரில்லர் படமா இருக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரிதான் எனக்கு இந்தப் படமும் அமைஞ்சது.

இந்த படம் ‘தங்கம்’ பற்றிய ஒரு படம். தங்கம் எங்கலாம் இருக்கோ அந்த இடங்கள்லலாம் இந்தக் கதை நகரும். ஒரு சராசரி குடும்பப் பையன் வாழ்க்கையில் இந்த தங்கத்தால எப்படி மாறுதுங்கறதுதான் படத்தோட கதை.

பாபி சிம்ஹா ஒரு முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு. படத்தோட டிரைலரை எனது திரையுலக நண்பர்களான சில இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் காட்டினேன். எல்லாருமே வித்தியாசமா இருக்குன்னு பாராட்டினாங்க.

இது ஒரு ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் படம். ஒரு சோஷியல் மெசேஜோட படம் இருக்கும். கண்டிப்பா அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கிற படமா இருக்கும்,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் சிரிஷ்.

Read Previous

விரைவில் திரைக்கு வரும் ‘அம்மணி’

Read Next

விஜய் டிவி – செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை திரைப்படங்கள்…