தமிழ்த் திரையுலகின் மற்றுமொரு சகாப்தம் நேற்று இரவு மறைந்தது. தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலும் இப்படி ஒரு நடிகையைப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
தன்னுடைய நகைச்சுவை நடிப்பாலும், குணச்சித்திர நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த நடிகை மனோரமா நேற்று இரவு மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மனோரமா, தமிழ்த் திரையுலகத்தில் ‘ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள அநேக நடிகர்கள், நடிகைகள் நடித்த படங்கள் அனைத்திலும் மனோரமா கண்டிப்பாக நடித்திருப்பார். அந்த அளவிற்கு அந்தக் கால நடிகர்கள், நடிகைகள் முதல் சில வருடங்களுக்கு முன் அறிமுகமானவர்கள் வரை மனோரமா நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லலாம்.
உடல் நிலை காரணமாக கடந்த சில வருடங்களாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போதுதான் உடல் நிலை தேறி வந்து விழாக்களில் பங்கு கொள்ள ஆரம்பித்தார். அவரை நடிக்க வைக்க பல இயக்குனர்களும் தயாராக இருந்தனர்.
2013ம் ஆண்டு வெளிவந்த ‘சிங்கம் 2’ படம்தான் மனோரமாக கடைசியாக நடித்த படம்.
1958ம் ஆண்டு வெளிவந்த ‘மாலையிட்டட மங்கை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர், 1963ல் வெளிவந்த ‘கொஞ்சும் குமரி’ படத்தில் நாயகியாகவும் நடித்தார்.
1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய ‘புதிய பாதை’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைகக்கான தேசிய விருதைப் பெற்றார். 2002ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்பட விருதுகள், மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் மனோரமா சொந்தக் குரலில் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டான பாடல்களாக அமைந்துள்ளன.
அண்ணாதுரை, எம்ஜிஆர், கருணாநிதி, என்டிஆர், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதல்வர்களுடன் திரையுகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோரமாவைப் போல் இனி ஒரு நடிகை வந்து பிறக்கவும் முடியாது, அவரைப் போல சாதனைகளைப் புரியவும் முடியாது. திரையுலகத்தில் என்றும் ஒரே ஒரு மனோரமாதான்.
அவரது ஆன்மா சாந்தியடைய ஸ்கிரீன்4ஸ்கிரீன் இணையதளம் பிரார்த்திக்கிறது.