இசைதான் என் உலகம் – அம்ரீஷ்

70களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையுலகில் துறுதுறுப்பான நாயகியாகப் பெயர் வாங்கியவர் ஜெயசித்ரா. அவருடைய மகன் அம்ரீஷ் தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஜெயசித்ரா இயக்கிய ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் அம்ரீஷ் கதாநாயக அறிமுகமானார். அந்தப் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் அம்ரீஷ் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இப்போது லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

நடிப்பை விட்டு இசையமைக்க வந்தது ஏன், இசையமைப்பாளராக அறிமுகமாவது எப்படி என அம்ரீஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘காஞ்சனா 2’, அதுக்கப்புறம் லாரன்ஸ் சார் ஒப்பந்தமான படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. அந்தப் படத்துல வந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ டயலாக்குக்கு நிறைய பேர் ரசிகர்கள், அதுக்கு நான் கூட ரசிகன். நான் எதிர்பார்க்கவேயில்லை, இவ்வளவு பெரிய டீம், இவ்வளவு பெரிய செட்டப் உள்ள படத்துல எனக்கு இசையமைக்கிற வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ஒரு ரெண்டு, மூணு படம் கழிச்சி, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஒரு 5 வருஷத்துக்கப்புறம் வந்தாலும் ஒரு பெரிய டீம் இருக்கிற ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துல எனக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். லாரன்ஸ் சார், சூப்பர் குட் மூவீஸ், வேந்தர் மூவீஸ், இயக்குனர் சாய் ரமணி இப்படி பெரிய காம்பினேஷன்ல நானும் சேர்ந்து வேலை பார்க்கிறது எனக்குக் கிடைச்ச பெரிய வாய்ப்பு.

படத்துல ஆறேழு பாட்டுக்கள் இருக்கு, மூணு பாடல்கள் கம்போஸ் போய்க்கிட்டிருக்கு. நல்லபடியா வந்துட்டிருக்கு. அடுத்து ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்புல பரத் நாயகனாக நடிக்கிற ‘பொட்டு’ படத்துக்கும் இசையமைக்கிறேன். இந்த வருஷம் எனக்கு ஒரு சிறந்த அறிமுகமா இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

2010 ல ‘நானே என்னுள் இல்லை’ படத்துல எங்க அம்மா நடிகை ஜெயசித்ரா என்னை நாயகனா அறிமுகப்படுத்தினாங்க. ஆனால், எனக்கு சின்ன வயசுல இருந்தே இசையிலதான் ஆர்வம் இருந்துச்சி. எல்லா அம்மா, அப்பாவுக்கும் தங்களுடைய அப்பா அம்மா இப்படி வரணும், அப்படி வரணும்கற ஆசை இருக்கும். எங்க அம்மாவுக்கு நான் கதாநாயகனா வரணும்னு ஆசை இருந்துச்சி. அவங்க ஆசைப்படி ஒரு படம் ஹீரோவா நடிச்சி , அந்தப் படத்துக்கும் நானே மியூசிக் பண்ணேன். அப்புறம் இசையமைப்பாளர் மணிசர்மாகிட்ட புரோகிராமரா வேலை பார்த்தேன். அப்புறம் ஏ.ஆர்.ரகுமான் சார் கிட்ட வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. அவர் கிட்ட மூணு வருஷம் இருந்தேன். அப்புறம் பெரிய முன்னணி இசையமைப்பாளர் கிட்ட பணிபுரியற வாய்ப்பு கிடைச்சது.

இசையில் ஆர்வம் இருக்கிற நான் எப்படி நாயகனா அறிமுகமானேன்னு பலர் ஆச்சரியப்பட்டாங்க. ஆனால், எனக்கு இசைதான் எல்லாமேன்னு நான் முடிவு பண்ணினேன். அதனால், நடிக்கறத விட்டுட்டு இசை பக்கம் வந்துட்டேன். இனிமேல் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்க மாட்டேன். இசைங்கறது உலகம் முழுக்க இருக்கிற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போகமாட்டேன், எனக்கு மியூசிக்தான் எப்பவுமே.

ரொம்ப நாளா முன்னணியில இருக்கிற லெஜன்ட்டுகளோட வேலை பார்க்கிற ஆசை இருந்துச்சி. சென்னையில சொந்தமா ஸ்டுடியோ போட்டேன். அப்ப மௌனம் ரவி சார் கிட்ட ஸ்டுடியோ பத்தி பேசினேன். நீங்க நல்லா ஹார்ட் ஒர்க் பண்ணுங்க, நல்லதே நடக்கும்னு சொன்னாரு. திடீர்னு ஒரு நாள் என்னை சூப்பர் குட்ல கூட்டிக்கிட்டு போய் அறிமுகப்படுத்தினாரு. அப்புறம் இயக்குனர் சாய் ரமணி கிட்ட அறிமுகப்படுத்தினாரு. அவர் இரண்டு பாட்டு கேட்டாரு, அப்புறம் அவரும் ஒண்ணும் சொல்லலை. மறுநாள் திரும்பவும் கூப்பிட்டாரு, அப்பதான் லாரன்ஸ் மாஸ்டரை அறிமுகப்படுத்தி வச்சாரு. அப்பதான் எனக்கு அந்தப் படத்துல லாரன்ஸ் மாஸ்டர் ஹீரோவா நடிக்கப் போறாருன்னு தெரியும். அவருக்கு நான் ரொம்ப பெரிய ரசிகன். அவர் கூட நமக்கு எங்க வாய்ப்பு கிடைக்கப் போகுதுன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். அவர் கிட்ட ரெண்டு பாட்டைப் போட்டுக் காட்டினேன். பாட்டைக் கேட்டுக்கிட்டேன் அவர் காருக்குள்ள, அவர் ஒரு மூவ்மென்ட் போட்டுக்கிட்டே இருந்தாரு, சரி வாய்ப்பு கிடைக்கலன்னா கூட பரவாயில்லை, அவருக்கு நம்ம பாட்டு பிடிச்சிருக்கேன்னு நினைச்சேன். உடனே, இந்தப் பாட்டை எடுத்து வச்சிக்கப்பான்னு சொன்னாரு. அவரைத் திருப்திப்படுத்தறது ரொம்ப கஷ்டம், ஒரு நல்ல மனிதர், இயக்குனர், நடன இயக்குனர், நடிகர், இசை ஞானம் உள்ளவர். அப்புறம் அடுத்த பாட்டைக் கேட்டுக் கேட்டு என்னையே இசையமைப்பாளரா நியமிக்க சம்மதிச்சாரு.

எனக்கு எப்பவுமே மெலடி பாடல்கள்தான் பிடிக்கும். குத்துப் பாடல்கள் சீசன் பாடல்களாதான் இருக்கும். டிரென்ட் மாறிக்கிட்டே இருக்கும் போது நம்மள அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். மெலடி, குத்துப் பாடல்கள் இப்படி டிரென்ட்டுக்கு ஏத்தபடி இசையமைச்சால்தான் ரசிகர்களை கவர முடியும்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கப்புறமா அடுத்து ‘நாகா’ படத்துக்கும் இசையமைக்க இருக்கிறேன்,” என்றார் அம்ரீஷ்.

நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்யும் போது நமக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும், அது அம்ரீஷுக்கும் கிடைக்க வாழ்த்துகள்.

Read Previous

Chennai Rains 2015 | Save Adayar by Badava Gopi | Video

Read Next

‘ரஜினி முருகன்’ – அனைவருக்குமான படம்

Most Popular