‘தனி ஒருவன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனரான மோகன் ராஜாவுக்கும் திரையுலகத்தில் தனி அந்தஸ்து கிடைத்தது.
அப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படத்தை மோகன் ராஜாதான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு இயக்குனரே அப்படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
அதனால், மோகன் ராஜா இயக்கத்தில் விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு கூட்டணியாக இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. சிவகார்த்திகேயன், மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது பற்றிய அறிவிப்புதான் அது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன் ராஜாவும், சிவகார்த்திகேயனும் இந்தப் புதிய படத்தில் இணைய உள்ளார்கள். இந்நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இணையும் இரண்டாவது படம் இது.
மற்ற நட்சத்திரத் தேர்வுகளும், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வுகளும் விரைவில் நடைபெற உள்ளன.
இயக்குனர் மோகன் ராஜாவின் படங்களும், சிவகார்த்திகேயனின் படங்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான நகைச்சுவை, காதல் கலந்த படங்களாகவும் இருக்கும். அது அவர்களின் புதிய படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்காமல் அமைந்த இந்த கூட்டணி இனிமையான ஒரு படத்தைக் கொடுக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.