பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2015ம் ஆண்டிற்கான 100 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து திரையலக நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.
ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய வசூல் நாயகர்களாகக் கருதப்படும் விஜய், அஜித் இடம் பெறாதது அவர்களது ரசிகர்களிடையே பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பட்டியலில் சந்தானம் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று. அவர் 52வது இடத்தில் உள்ளார். சூர்யா 71வது இடத்திலும் ஆர்யா 80வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த்தே சந்தானத்திற்குப் பின்னால் 69வது இடத்தில்தான் உள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து ஏ.ஆர்.ரகுமான் 14வது இடத்திலும், கிரிக்கெட் வீரரான அஷ்வின் 31வது இடத்திலும், தனுஷ் 37வது இடத்திலும் உள்ளனர்.
கமல்ஹாசன், ரஜினிகாந்தை விட முன்னணியில் 46வது இடத்தில் உள்ளார். கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் 61வது இடத்திலும், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா 88வது இடத்திலும் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 2015 பட்டியலில் ஷாரூக்கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சல்மான் கான் 2வது இடத்திலும், அமிதாப் பச்சன் 3வது இடத்திலும், கிரிக்கெட் வீரரான தோனி 4வது இடத்திலும், ஆமீர் கான் 5வது இடத்திலும் உள்ளனர்.
பிரபலங்களின் சம்பளம், மற்ற வருமானம், அவர்களுடைய புகழ் ஆகியவற்றை 2014 அக்டோபர் 1ம் தேதி முதல் 2015 செப்டம்பர் 30ம் தேதி வரையிலான நாட்களில் கணக்கு வைத்து அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.