குளோபல் மீடியா ஒர்க்ஸ் D. விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’. ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் பஞ்சு அருணாச்சலம் இப்படத்திற்காகப் பாடல்களை எழுதுகிறார்.
இப் படம் மூலமாக மூன்று தலை முறையாகப் பாடல் எழுதும் சிறப்பைப் பெறுகிறார் பஞ்சு அருணாசலம்.
நடிகர் முத்துராமனுடன் ‘காற்றினிலே ஒரு கீதம், மயங்கினாள் ஒரு மாது, அவரது மகன் நடிகர் கார்த்திக்குடன் ‘சின்ன கண்ணம்மா, என் ஜீவன் பாடுது,’ ஆகிய படங்களில் பாடல்கள் எழுதிய பஞ்சு அருணாச்சலம், தற்போது முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கௌதம் கார்த்திக்குடன் ‘முத்துராமலிங்கம்’ படத்தில் பாடல்களை எழுதி முன்று தலைமுறைகளுடன் பணியாற்றிய சிறப்பைப் பெறுகிறார்.
மேலும் நடிகர் முத்துராமன் வில்லனாக நடித்த ‘பாயும் புலி’ படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல இளம் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் தற்போதும் பஞ்சு அருணாசலம் பணியாற்றி வருகிறார்.
‘முத்துராமலிங்கம்’ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
பஞ்சு அருணாச்சலம் தயாரித்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா 40 ஆண்டு காலமாக திரையுலகில் கோலோச்சி வருகிறார்.
இருவரது கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.