நடிகை ஊர்வசியின் அக்காவும் நடிகையுமான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 50.
தமிழில் கே. பாக்யராஜ் ஜோடியாக ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க குண்டான நடிகை ஒருவரைத் தேடினார். ஆனால் அப்படி யாரும் கிடைக்கவில்லை. கடைசியில் கல்பனாவே தன் தோற்றத்தை குண்டானப் பெண்ணாக மாற்றிக் கொண்டு நடித்தார்.
இன்றைய ‘இஞ்சி இடுப்பழகி’க்கெல்லாம் அன்றே முன்னோடியாக இருந்தவர் கல்பனா.
‘சதீ லீலாவதி’ படத்தில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக அந்த அப்பாவிப் பெண் ‘குண்டூஸ்’ கதாபாத்திரத்தையும், ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் மலையாளம் கலந்து தமிழ் பேசி நடித்த நர்ஸ் கதாபாத்திரத்தையும், ‘டும் டும் டும்’ படத்தில் இடம் பெற்ற பட்டம்மா கதாபாத்திரத்தையும் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது. கடந்த வருடம் வெளிவந்த ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாகவும் கல்பனா நடித்திருந்தார்.
தற்போது தமிழில் நாகார்ஜுனா, கார்த்தி நடிக்கும் ‘தோழா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் இருந்த போதுதான் கல்பனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கல்பனாவின் திடீர் மரணம் மலையாளத் திரையுலகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கல்பனாவின் அக்கா கலாரஞ்சனி, தங்கை ஊர்வசியும் தமிழ், மலையாளத்தில் நடித்து வருபவர்கள்.
மம்முட்டி, மோகன்லால் உட்பட பலரும் கல்பனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.