மதுரை – தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.
இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் பாண்டியராஜன், பாண்டியன் ஆகியோருக்குப் பாட்டியாக ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றவர்.
சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தவர் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி, வயது 80. அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் மருத்துவச் செலவுக்கும், நல்லது கெட்டதுக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன், சுமார் 10 சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தது நாளிதழ் ஒன்றில் செய்தியாக வெளிவந்தது.
அந்தச் செய்தியைப் படித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி அவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதோடு அவரை ஒரு வாரத்திற்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கும் ஆவன செய்துள்ளார்.