சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, ஜனகராஜ் ஆகியோர் நடித்த ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி.
அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
படம் பற்றி இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில்,
“எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் தான் அர்ஜூமனை அறிமுகம் செய்து வைத்தார்.
விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்,” என்கிறார்.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.
GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்கிறார்.