கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘இறைவி’.
இப்படத்தின் இசை வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி ‘இறைவி’ படம் நான் ஆத்மார்த்தமாக பண்ணிய படம் என நெகிழ்வுடன் பேசினார்.
“இந்தக் கதையை படிச்சதுல இருந்து இதை எப்பப் படமா பார்க்கப் போறோம்கற ஒரு ஆர்வம் இருந்தது, அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது.
இந்தக் கதையை எழுதினதால கார்த்தி மேல எனக்கு பெரிய மரியாதை இருந்தது. “பீட்சா, ஜிகர்தண்டா” மாதிரி ஒரு படம் எடுத்து முடிச்சதுக்கப்புறம், வேற வேற விதத்துல படம் பண்ண முடியும். அதுக்கு கார்த்தி தகுதியான ஆளும் கூட.
ஆனால், இப்படி ஒரு கதைய நானே கார்த்தி கிட்ட இருந்து எதிர்பார்க்கலை. நம்ம எல்லாருக்குமே சாதாரணமா தெரிஞ்ச, நம்ம கூட இருக்கிற மனைவியோ இல்லை காதலியோ இல்லை மகளோ, சகோதரியோ இல்லை அம்மாவோ அவங்களப் பத்தின ஒரு படம் இது.
நாம கவனிக்காம விட்ட ஒரு பக்கத்தை பத்தின கதை இதுன்னு கூட சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம் ஒரு செகண்ட்டாவது நம்ம கூட இருக்கிற பெண்களைப் பத்தி உத்து கவனிக்கத் தோணும் இந்தப் படம். அவங்களுக்கு என்ன தேவை, அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்க வைக்கும்.
ஆனால், இது எதுவுமே தெரியாம நாம ஆம்பளைங்க வாழறமோன்னு நம்மளப் பத்தின படமாவும் இது இருக்கும். நான் நடிச்ச படமா இருந்தாலும் ஆடியன்ஸ் கூட முதல் நாள் முதல் காட்சி பார்க்கணும்னு ஆசைப்படறேன். இந்தப் படத்துல நான் எந்த வகையிலயும் ஏமாத்த விரும்பலை. நான் ஆத்மார்த்தமா பண்ண படம் இது.
இந்தப் படத்தோட கதையைப் படிச்சி முடிச்சதும் கார்த்தி கிட்ட ஒண்ணே ஒண்ணு சொன்னேன். கார்த்தி உங்க வாழ்க்கையில இருக்கிற சகோதரி, மனைவி, அம்மா என் வாழ்க்கையில சம்பந்தப்பட்ட ஐந்தாறு பெண்கள், இவங்க எல்லாம் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அது இந்தக் கதையை படிக்கும் போது நான் உணர்ந்தேன். கண்டிப்பா அதே விஷயம், படம் பார்க்கிற ஆடியன்சுக்கும் கடை கோடி மக்கள் வரைக்கும் இது போய் சேரணும்னு ஆசைப்படறேன். படம் பக்காவா, சூப்பரா வந்திருக்கு.
இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முதல்ல தைரியமா வரணும், அதுக்கு எங்க தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நன்றி சொல்லணும். படத்தை வெளியிடப் போற அனைவருக்கும் நன்றி,” என்றார் விஜய் சேதுபதி.