தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ரீமேக் வரும் 29ம் தேதியன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் ஆரம்பமாக உள்ளது.
தீவிர அரசியலில் இறங்கிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் சிரஞ்சீவி. அவர் கடைசியாக நடித்த‘சங்கர்தாதா எம்பிபிஎஸ்’ படம் 9 ஆண்டுகளுக்கு முன் 2007ம் ஆண்டு வெளிவந்தது.
150வது படத்தில் நடிக்க முடிவெடுத்ததும் பலரிடம் கதை கேட்டு வந்தார் சிரஞ்சீவி. ஆனால், அவருக்கு எதுவுமே திருப்தியளிக்கவில்லை. கடைசியாக ‘கத்தி’ படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.
கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் கதையை சிரஞ்சீவிக்கு ஏற்ற விதத்தில் மாற்ற தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் படத்தின் இயக்குனரான வி.வி.விநாயக்.
அடுத்த மாதம் வரை முகூர்த்த நாள் எதுவும் இல்லாததால் வரும் வெள்ளிக் கிழமை 29ம் தேதி சிரஞ்சீவியின் அலுவலகத்தில் இப்படத்திற்கான பூஜையை நடத்த உள்ளார்கள்.
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.