‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற ஆபாசப் படத்தில் நடித்த போதே ஜி.வி.பிரகாஷை மகளிர் அமைப்புகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.
அந்தப் படமும் இளைஞர்கள் ஆதரவுடன் (?) நல்ல வசூலை அள்ளிவிட்டது. ஆனாலும், மீடியாக்கள் அந்தப் படம் பற்றியும் ஜி.வி.பிரகாஷின் இமேஜைப் பற்றியும் வறுத்தெடுத்துவிட்டன. அந்த சர்ச்சைகள் ஜி.விக்கு மேலும் விளம்பரத்தைத்தான் தேடிக் கொடுத்தன.
அடுத்து மீண்டும் ஒரு சிக்கலில் சிக்க உள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவர் முதன் முதலாக நாயகனாக அறிமுகமான படம் ‘பென்சில்’. இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தப் படம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடக்கும் சிவ விவகாரமான விஷயங்களைபற்றிய படமாக உருவாகி உள்ளதாம்.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்து விடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.
இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப்
பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்களது சங்கம் மூலமாக இந்தப் படத்தைத் எப்படியாவது தடை செய்ய முயற்சித்து வருகிறதாம்.
ஏற்கெனவே பல காரணங்களால் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும் இந்தப் படம் நாளையாவது வந்து விடுமா ?.