‘அம்மா கணக்கு’, ஏன் இந்தப் பெயர் என தனுஷிடம் கேட்டால், “ஆறு மாதங்களுக்கு முன்பே வைத்த தலைப்பு இது. என்னை எந்த வம்புலயும் கோத்து விட்டுடாதீங்க,” என உஷாராகவே பதிலளித்தார்.
‘காக்கா முட்டை, விசாரணை’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் அமலா பால், ரேவதி, யுவஸ்ரீ, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘அம்மா கணக்கு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
“நான் இதுவரை தயாரித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நான் வந்ததேயில்லை. ஏனென்றால் நான் வந்தால், அந்தப் படங்களின் மீதான கவனிப்பு என் மீது திரும்பி விடும், அதற்காகவே நான் வருவதில்லை.
இந்தப் படம் எனது மனதுக்கு நெருக்கமான படம், அதனால்தான் வந்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக அமலா பால் அடுத்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளுவார்,” என மனம் திறந்து பாராட்டினார் தனுஷ்.
படத்தில் 10வது படிக்கும் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார் அமலா பால். ஓரிரு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளிவந்த ‘மிலி’ படத்தில் பள்ளிக் கூட மாணவியாக நடித்த அமலா பால், அதற்குள் அம்மா கதாபாத்திரத்திலா என அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்டோம்.
“இந்தப் படம் ஹிந்தியில் தயாரான போது, படத்தைப் பார்த்த தனுஷ், எனக்கு தொலை பேசி செய்து, இந்தப் படம் பற்றி சொன்னார். படத்தின் நாயகிக்கு வேலைக்காரப் பெண் கதாபாத்திரம் என்றார். என்னைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா என முதலில் அவரிடம் கோபப்பட்டேன்.
ஆனால், படத்தில் நடிக்க ஆரம்பித்ததும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்காக பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஒரு மகளுக்கு அம்மாவா நடிப்பதற்காக மன ரீதியாகவும் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வந்த என் கணவர் இயக்குனர் விஜய் என்னை மிகவும் பாராட்டினார்.
இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும். அதனால் இந்தப் படத்தில் நடித்தேன். இப்படத்துதிற்காக கிடைத்தாலும் மகிழ்ச்சிதான், கிடைக்கவில்லை என்றாலும் மகிழ்ச்சிதான்,” என்றார்.
ஹிந்தியில் ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற பெயரில் கடந்த மாதம் வெளிவந்த இப்படம் அங்கு மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தான் நடித்த ஹிந்திப் படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல். ராய்-யுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார் தனுஷ்.
இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.