‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுடன் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. சமீபத்தில் வெளிவந்த ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
அழகும், திறமையும் கொண்ட சார்மியை தமிழ்த் திரையுலகம் ஏனோ கொண்டாடவில்லை. இப்போது அனைவரும் கொண்டாடும் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார் சார்மி.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இரு இளம் பெண்களுக்கு தன்னுடைய தலைமுடியைத் தானமாகத் தந்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களுடைய அழகுத் தோற்றத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால், சார்மி அதையும் மீறி தன்னுடைய கூந்தலில் இருந்து 18 இன்ச் நீள கூந்தலை கட் செய்து இரண்டு விக்குகளைத் தயார் செய்து அந்தப் பெண்களுக்கு கொடுக்க உள்ளார்.
“ சில நாட்களுக்கு முன் என்னுடைய தோழி என்னை அழைத்திருந்தார். அப்போதுதான் அந்த இரண்டு பெண்களை நான் சந்தித்தேன். அவர்கள் என்னுடைய கூந்தலுக்குள் கையை நுழைத்து அழகாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். கீமோதெரபி சிகிச்சையில் அவர்கள் இருவரும் அவர்களது கூந்தலை இழந்திருந்தனர்.
அவர்களது வலி என்ன என்பதை என்னால் உணர முடிந்தது. உடனே என்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட்டை அழைத்து என்னுடைய கூந்தலை கட் செய்து இரண்டு விக்குகளைத் தயார் செய்யச் சொன்னேன்.
சீக்கிரமே, அந்த இரண்டு விக்குகளுடன் அந்த இரண்டு பெண்களைச் சந்திக்க உள்ளேன். அவர்களது முகத்தில் தெரியப் போகும் சந்தோஷத்தைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சார்மி.
சார்மிக்கு ஒரு சல்யூட்…