தலைப்பைப் பார்த்ததும் குழம்ப வேண்டாம்…யானை, புலி, சிங்கம், நாய், குரங்கு என பல விதமான மிருகங்களை வைத்து படங்களைப் பார்த்த நமக்கு முதல் முறையாக ‘வாஸ்து மீன்’-ஐ மையமாக வைத்து ஒரு படத்தைக் கொடுக்க இருக்கிறார்கள்.
‘ஈரம், வல்லினம்’ படங்களில் இயக்குனர் அறிவழகன் உதவியாளராக இருந்த மணி செய்யோன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அது என்ன ‘வாஸ்து மீன்’-ஐ மையமாக வைத்து ஒரு கதை என்று இயக்குனரைக் கேட்டால்,
“வாழ்க்கையில பலருக்கும் அதிர்ஷ்டத்தை நம்பற பழக்கம் இருக்கு. சில விஷயங்கள் நடந்தால் அது அதிர்ஷ்டத்தாலதான் நடந்ததுன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க. இந்தப் படம் அதிர்ஷ்டத்தை ஆதரிக்கவும் செய்யலை, எதிர்க்கவும் செய்யலை.
சந்தர்ப்பங்கள் எப்படி அதிர்ஷ்டத்தாலதான் நடக்குதுங்கறத சொல்லியிருக்கோம். அதிர்ஷ்டம்தான் படத்தோட கதையின் மையம்னு முடிவு பண்ணோம்…அப்புறமாதான் அதுல சில சென்டிமென்ட்ஸ், வாஸ்து, ஜாதகம், வாஸ்து மீன்…இப்படி பல விஷயங்கள் சேர்ந்தது.
வாஸ்து மீனுக்குதான் கட்டப்பான்னு பேரு வச்சிருக்கோம். அது காணாமப் போகுது…அதனால நடக்கிற சம்பவங்களை கலகலப்பா சொல்லியிருக்கோம்.
சிபி, ஐ.டி-யில வேலை பார்க்கிறவரா நடிச்சிருக்காரு..ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையா சிட்டி கேர்ள்ளா நடிச்சிருக்காங்க. படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சி…இறுதிக் கட்டப் பணிகள் நடந்துக்கிட்டிருக்கு. சீக்கிரமா படம் வெளிவந்துடும், குழந்தைகளுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்,” என்கிறார் இயக்குனர்.
வின்ட் சிம்ஸ் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் இது.